ஆன்மீகத்திற்காக சில விஷயங்களை நம் முன்னோர்கள் செய்து வைத்தாலும் கூட, அதில் ஒரு அறிவியல், சூழலியல் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த கூறுகளும் உள்ளடங்கியிருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் தான் தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெறும் தெப்ப உற்சவங்கள். மதுரையை பொறுத்தவரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அதற்கு ஒரு மிகச்சிறந்த சான்று. ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தைப்பூசத் தன்று நடைபெறும் இந்தத் தெப்பத் திருவிழாவை இன்றளவும் கண்டுகளிக்கின்றனர்.
மாசி மகம்
அதுபோன்ற ஒரு தெப்ப உற்சவம் தான் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று நடைபெறுவது. வைணவ கோவில் என்றாலும் கூட இந்து மக்கள் அனைவரும் வேறுபாடு இன்றி பெருமாளை வணங்கி மகிழும் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். பெரியார் பேருந்து நிலையத்திற்கு சற்று அருகே அமைந்துள்ள இத்திருக்கோயிலின் வெளிப்புற திருக்குளம் தான் மதுரை டவுன்ஹால் ரோட்டில் அமைந்துள்ள பெருமாள் தெப்பம்.
பெருமாள் தெப்பம்

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பௌர்ணமி நாளன்று இங்கு நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது. கடந்த 1960 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இங்கு தெப்பத் திருவிழா நடைபெற்று வந்த நிலையில், சிறிது சிறிதாக குளத்தைச் சுற்றி நடைபெற்ற ஆக்கிரமிப்புகள், இப்படி ஒரு குளம் இருந்ததையே சுத்தமாக மறைத்து விட்டன. இந்நிலையில் பல்வேறு நீதிமன்ற போராட்டங்களில் வாயிலாக குளத்தின் கரையை சுற்றி இருந்த கடைகள் எல்லாம் முற்றிலும் அகற்றப்பட்டு தற்போது பளிச்சென்று காணப்படுகிறது.
தண்ணீரில்லாத தெப்பம்
இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், ‘மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக இக்குளம் வெட்டப்பட்டுள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த தெப்பத் திருவிழா 1968க்கு நடைபெற்று வந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் தண்ணீர் நிரப்ப முடியாமல் தெப்பத் திருவிழா நடைபெறுவதில்லை. கிருதுமால் நதியின் உப ஆறு மூலமாக இந்த தெப்பக்குளத்திற்கு நீர் வரத்து இருந்துள்ளது. மதுரை மாநகராட்சியாக உருவெடுத்த பின்னர் நிறைய கால்வாய்கள் நீர்நிலைகள் அனைத்தும் கழிவுநீர் வாய்க்காலாக மாறிவிட்டன. அதுமட்டுமன்றி இந்த தெப்பக்குளத்தை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உயர்நீதிமன்ற பதிவாளர் ஒருவரின் வழக்கு காரணமாக நீண்ட காலம் நடைபெற்று தற்போது, அந்த ஆக்கிரமிப்புகளாக இருந்த 196 கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. மதுரை மாநகராட்சியும் கோவில் நிர்வாகமும் இந்த ஆக்கிரமிப்பை அனுமதித்ததால் தான், இங்கு ஒரு தெப்பக்குளம் இருந்தது என்பதையே இந்த பகுதி மக்களே மறந்து விட்டார்கள். ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகும் கூட இன்னும் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. மதுரையின் மையத்தில் சுமார் ஒன்றை ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த குளம், இந்தப் பகுதியின் நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக திகழ்கிறது. ஆகையால் அறநிலையத்துறை இதில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். இந்த தெப்பக்குளத்தை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும். இதற்கு தண்ணீர் வரும் வழிகளை சுத்தப்படுத்தி அதில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். வணிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் நிறைய விடுதிகள் உள்ளன. சுமார் 1200 அடிக்கு கீழே நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டது. இங்கிருக்கின்ற விடுதி உரிமையாளர்கள் தண்ணீரை வெளியில் இருந்து விலை கொடுத்து வாங்கித்தான் புழங்குவதற்கு பயன்படுத்துகிறார்கள். வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி தெப்ப திருவிழா என்பதால் உடனடியாக இதனை சீரமைத்து தண்ணீர் வருவதற்கான வழிகளை மாநகராட்சியும் அறநிலைத்துறையும் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
நீர் வழிப்பாதைகள்
இப்பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் கூறுகையில், ‘இந்த தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகுதான் இப்படி ஒரு தெப்பக்குளம் இருப்பதே உலகிற்கு தெரிய வந்தது. கடந்த 1950 ஆம் ஆண்டு இங்கு கடைசியாக தெப்ப திருவிழா நடைபெற்றது. அப்போது மிதவை தெப்பம் தீப்பிடித்ததால் அத்துடன் இந்த திருவிழா நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தெப்பத்திற்கு தண்ணீர் வரும் நீர்வழிப் பாதைகள் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் நகர விரிவாக்கம் காரணமாகவும் குளத்திற்குள் தண்ணீர் நிரப்ப இயலவில்லை. அதுமட்டுமன்றி குளத்திற்கு அருகே இருந்த பெரிய நந்தவனமும் தற்போது அழிந்துவிட்டது. ஆகையால் பெருமாள் தெப்பத்தை சீரமைக்கவும் பாதுகாக்கவும் உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
சட்டமன்ற மதிப்பீட்டு குழு
இதுகுறித்து கூடலழகர் பெருமாள் கோயில் செயல் அலுவலர் பிரதீபாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘தெப்பத்திற்குள் கழிவுநீர் வருவதை தடுப்பதற்கு மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் மதுரைக்கு வந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழுவுக்கும் இந்த தெப்பக்குளத்தின் பெருமை குறித்து தற்போதைய நிலை குறித்து விரிவான மனு அளித்துள்ளோம். கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலான சட்ட போராட்டத்தில் தற்போது வெற்றி பெற்று, குளத்தைச் சுற்றி தற்போது இரும்பு வேலி அமைத்துள்ளோம். மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி இருப்பதைப் போன்று நடைபாதை அமைத்து மின்விளக்குகள் உள்ளிட்ட பராமரிப்புகளோடு சீரமைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளோம். இதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிடம் வலியுறுத்தினோம். அவர்களும் தலைமைச் செயலாளர் கூடுதல் செயலாளர் துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்துள்ளனர்’ என்றார்.
எப்போது பொலிவு பெறும்?
60 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தற்போது புது பொலிவுக்கு பெருமாள் தெப்பம் தயாராகி வந்தாலும் கூட, இதனுள் தண்ணீர் நிரப்புவதற்கான வழிவகைகள் உடனடியாக செய்யப்பட்டால் தான் தெப்பத்தின் அழகு முழுமை பெறும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள். அறநிலையத்துறையும் மதுரை மாநகராட்சியும் இணைந்து இதனை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






