திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது என்பது ஒரு கலை தான். ஒரு காலத்தில் அடுக்கு மொழி வசனங்கள் நீட்டி முழக்கும் வசனங்கள் ரசிக்கப்பட்டன.அவை மொழி முழக்கங்களாக இருந்தன. அது ஒரு காலம்.பிறகு வசனம் எதார்த்தமான மொழிக்கு மாறியது.
சொற்கள் குறைந்து கூர்மையானதாக மாறியது. பிறகு நவீனம் என்ற பெயரில் புரியாத வசனங்கள் வந்தன.சினிமா என்பது காட்சி ஊடகம் என்ற போதிலும் எத்தனை பெரிய இயக்குநராக இருந்தாலும் ஒரு திரைப்படத்தில் வசனத்திற்கான இடத்தை மறுப்பதில்லை.
சூழலுக்கேற்ற மாதிரியும் மொழி அலங்காரம் இல்லாமலும் கருத்துச் செறிவுடனும் வடிகட்டிய வார்த்தைகளைக் கொண்டும் சொற்சிக்கனத்துடன் எழுதப்படும் வசனங்கள் ரசிக்கப்படுகின்றன. இப்படி வசனங்கள் எழுதுவது ஒரு கலை . அப்படிப்பட்ட கூர்மையான வசனங்களை
அண்மையில் வெளிவந்துள்ள ‘விஜயானந்த்’ படத்தில் எழுதியதுடன் பாடல்களையும் எழுதியவர் மதுரகவி .குறிப்பாக ஒரு மொழிமாற்றுப் படமான இந்த ‘விஜயானந்த் ‘படத்தில் அவர் எழுதியிருக்கும் வசனங்கள் ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டது
‘விஜயானந்த்’ படம் என்பது சாதனை நிகழ்த்திய வாழும் மனிதர் பற்றிய வரலாற்று படம் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒரு மனிதனின் வரலாற்றுப் பதிவாகவும் அதே சமயம் பாத்திரங்களின் தன்மை பிறழாமல் அதைச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ரிஷிகா சர்மா.
அப்படத்திற்கு அமைந்திருக்கும் வசனங்கள் படத்தின் தரத்தை பாத்திரங்களின் தன்மையைச் செழுமைப் படுத்தி உள்ளன என்றே கூறலாம்.
சினிமாவில் 23 ஆண்டு காலமாக பல்வேறு தளங்களில் இயங்கி வந்தாலும் அவர் புகழ் மறைவுப் பிரதேசத்தில் தான் மதுரகவி இருந்து வருகிறார்அவருடன் உரையாடியபோது
உங்கள் முன்கதை கொஞ்சம் சொல்லுங்கள்?
எனக்கு பூர்வீகம் தேனி என்றாலும் நாங்கள் இருப்பது வத்தலக்குண்டு அருகே தேவரப்பன்பட்டி கிராமம்.
என் பெயர் சிவமுருகன். காளிதாசனின் கவித்துவத்தில் மனம் லயித்து என் பெயரை மதுரகவி என்று வைத்துக் கொண்டேன்.ஏனென்றால் காளிதாசனுக்கு மதுரகவி என்றொரு பட்டம் உண்டு.
நான் சின்ன வயதிலேயே சினிமா ஆர்வத்துடன் சென்னை வந்தவன்.நான் அடிப்படையில்
ஓர் உதவி இயக்குநர் தான்.சில படங்களில் பணியாற்றி இருக்கிறேன். பல்வேறு திரைப்படங்களின் கதை விவாதங்களில் கலந்து கொள்வேன்.எனக்குக் கிராமத்து மண் சார்ந்த விஷயங்கள் மிகவும் பிடிக்கும் . அது சார்ந்த படங்கள் நேரடிப்படமாக இருந்தாலும் மொழிமாற்றுப் படங்களாக இருந்தாலும் அவர்கள்
சொல்லும் கதையைச் செழுமைப்படுத்துவேன்.
வசனங்கள் எழுதுவேன். டப்பிங் துறையில் பயிற்சி பெற்றேன். படங்களில் வரும் பல பாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தேன். டப்பிங் பணிகளுக்கு உதவினேன். இப்படி எப்போதும் இயங்கிக் கொண்டே இருந்தேன். எனக்கு கதை, வசனம், கவிதைகள் எழுத வரும்.
2006 ம் ஆண்டு கனவுத் தொழிற்சாலை என்ற குறும் படத்திற்கு வசனம் எழுதி கதைநாயகனாகவும் நடித்து உள்ளேன்.நான் சென்னை வந்த போது என் முன் இரண்டு நிபந்தனைகள் இருந்தன .நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று என் சினிமாக் கனவு நிறைவேறும் வரை குடும்பத்தைச் சிரமத்தில் வைத்து குடும்பத்தை வாட வைப்பது ஒன்று.
இன்னொன்று சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலேறி வருமானத்திற்கு வழி செய்து கொள்வது. அதன்மூலம் குடும்பத்தை வாடாமல் பார்த்துக் கொண்டிருப்பது.
நான் இதில் இரண்டாவதைத் தேர்வு செய்தேன்.
ஒரே துறையில் கவனம் செலுத்த முடியாத ஒரு வருத்தம் உண்டா?
நான் கதை விவாதங்கள், திரைப்படங்களுக்கு வசனம்,வாய்ப்புள்ள போது பாடலும் எழுதினேன்.
ஒரே துறையில் தீவிரமாக இயங்க முடியவில்லை என்கிற நிலை இருந்தாலும் நான் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
நூறு தனி ஆல்பம் பாடல்கள் எழுதியுள்ளேன்.டப்பிங் பணிகளில் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளேன். நான் டப்பிங் பேசி இருக்கிறேன் .இப்படி பல விதமான தொழில்கள் எனக்கு கை வந்த கலையாக இருப்பதால் அதிலேயே நான் பரபரப்பாக இயங்கி வருகிறேன். எனவே ஒரு துறையில் போவது பற்றிய எண்ணமே எனக்கு வரவில்லை. ஆனாலும் நான் திரையுலகில் நுழைந்து 23 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு நாளும் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்ததில்லை. இத்தனை ஆண்டு காலம் ஒரே துறையில் போயிருந்தால் பெரிதாக வெற்றி பெற்றிருக்கலாம் ,அல்லது தோல்வி அடைந்திருக்கலாம்.ஆனால் உத்திரவாதமான வருமானம் வந்திருக்குமா என்றால் தெரியாது.
திரையுலகில் இரண்டு வாய்ப்புகள் உண்டு, பத்து பேருக்கு நாம் பயன்பட வேண்டும் அல்லது பத்து பேரை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இதில் நான் முதல் வாய்ப்பை எடுத்துக் கொண்டேன்.பத்து பேரை நான் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்குத் தனியாக நான் வளரவில்லை.பலரும் என்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
அதனால் தான் நான் தேவைப்படும் அளவிற்கு என்னுடைய தகுதியை வளர்த்துக் கொண்டேன். உழைப்புதான் முதல் தகுதி என்று நினைக்கிறேன்.
அதிலிருந்து அனுபவங்கள் கிடைத்தன அதிலிருந்து எனக்கு சில வளர்ச்சி நிலைகளும் வந்தன.
இதுவரை பணியாற்றிய படங்கள்?
இதுவரை சுமார் 100 தனி ஆல்பங்கள் எழுதி இருக்கிறேன். 20 படங்களுக்கு உதவி வசனம் எழுதி இருக்கிறேன். 35 படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளேன். பல படங்களில் பின்னணி வசனங்கள் ஒலிப்பதிவு என இணைந்து பணியாற்றி இருக்கிறேன். தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியும் உள்ளேன். ஒரு வாரத் தொலைக்காட்சித் தொடரையும் இயக்கி உள்ளேன்.விளம்பரப் படங்களில் பணியாற்றியும் இயக்கியும் இருக்கிறேன்.பெரும்பான்மையான பணிகளில் எனக்குப் பெயர் வெளியே தெரியாத அளவிற்கு இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ஆனால் எனக்கு உரிய மதிப்பையும் சம்பளத்தையும் வழங்கி விடுவார்கள் .
கேஜிஎஃப்- 1 படத்தில் நான் பாடல்கள் எழுதினேன்.வசனத்தில் வசனகர்த்தா அசோக்குடன் இணைந்து பணியாற்றினேன்.
சில கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தேன்.கே ஜி எஃப் -2 படத்திலும் எனது பங்களிப்பு இருந்தது.
‘விஜயானந்த் ‘பட வாய்ப்பு எப்படி?
நான் தமிழ்ப் படங்கள் மட்டும் இல்லாமல் மொழி மாற்றுப்படங்கள் குறிப்பாக பான் இந்தியா படங்களிலும் பணியாற்றி இருக்கிறேன்.
இந்தப் படத்திற்கான வாய்ப்பு வந்தபோது தமிழில் மொழிமாற்றுப் படமாக செய்யும் போது அதை ஏதோ ஒலிமாற்றம் செய்வது போல் இல்லாமல் கதை,பாத்திரங்களின் தன்மை ஆகியவற்றின் முழு சாரத்தையும் அப்படியே தமிழுக்கு மாற்றும் படி உருவாக்க வேண்டும் என்று இயக்குநர் ரிஷிகா சர்மா விரும்பினார்.
வேறு மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்படும் படங்களுக்கு இவ்வளவு மெனக்கெடுவதில்லை. ஆனால் தமிழ்மொழிக்கு மட்டும் சரியாக அமைய வேண்டும் என்று பான் இந்தியா படங்கள் எடுப்பவர்கள் நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு நமது தமிழ் மொழியை முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.அதன்படி தான் இதில் நான் பணியாற்றினேன். இதில் உள்ள வசனங்கள் எல்லாம் அந்தந்த காட்சிகளுக்கும் பாத்திரங்களின் தன்மைக்கும் ஏற்ற மாதிரி வட்டார வழக்குகளுடன் அமைந்துள்ளன என்று பலரும் பாராட்டுகிறார்கள். அதற்கான இடத்தை அளித்தது இயக்குநர்தான்.இதில் இருக்கும் நான் எழுதிய ‘காளிதாசன் சாகுந்தலா ‘பாடல் எனக்கு மிகவும் பிடித்தது .அதை பலரும் பாராட்டுகிறார்கள். குறிப்பாகக் கன்னடத் திரை உலகத்தினர் விரும்பிப் பாராட்டினார்கள்.படத்தின் கதாநாயகி கூட அதைப் பிடித்திருப்பதாகப் பாராட்டினார். தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட அதன் சாரம் அறிந்து கேட்டுப் பாராட்டுகிறார்கள்.சொன்னால் நம்ப மாட்டார்கள்.. கன்னடத்தில் உள்ளவர்கள் தமிழ் மொழியை மிகவும் மதிக்கிறார்கள். தமிழ்மொழியின் ஆழத்தை மிகவும் ரசிக்கிறார்கள்.விஜயானந்த் படத்தின் மலையாள டப்பிங் ஒருங்கிணைப்பையும் நான் தான் பார்த்துக் கொண்டேன். அதற்கான ஆட்களை வைத்து தமிழில் உள்ளது போல் வசனங்கள் சிறப்பாக வருவதற்கு நான் உதவி செய்தேன்.
‘விஜயானந்த் ‘படத்தில் நீங்கள் எழுதியதில்பிடித்த வசனங்கள் ?
“நடு முதுகுத் தண்டு வளைய உழைப்பவனோட நடு வீட்டுல லட்சுமி வாசம் செய்வா!”
“எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேனும்
உழைக்காம உட்காந்துட்டா ஒரு பிச்சைக்காரன் தான்!”
“நான் மலையேறுறது நான் இந்த உலகத்த பாக்கணுங்குறதுக்காக.,
இந்த உலகம் என்னப் பாக்கணுங்குறதுக்காக இல்ல!”
“வரலாறுகளப் புரட்டுனா
ஞாபகத்துல நிக்கிறது
அற்புதமான வெற்றியும்
ஆகப்பெரும் தோல்வியும்தான்.
ஆனா
அதிர்ஷ்டத்தாலயும்
நல்ல வழிகாட்டியோட ஒத்துழைப்பாலயும் நாம
சில படிகள் ஏறுனாலும்
சிகரம் ஏறணும்னா
நேர்மையும் கடினமான உழைப்பும் தான் தேவைப்படுது”.

சினிமாவில் வசனகர்த்தாவுக்கான இன்றைய இடம் என்ன?
வசனங்கள் பேசப்பட்டு பல காலங்கள் ஆகிவிட்டன. அந்த வெற்றிடங்களை நிரப்ப ஆக்கப்பூர்வமான அனுபவ சாலிகள் நம் துறைக்கு அதிகம் தேவை.கதையின், பாத்திரங்களின், மொழிக்குப் பொருத்தமாக எழுதக்கூடிய வசனகர்த்தா இன்றைக்கும் தேவை .அதற்கு தகுதியானவர்களுக்கு இங்கே நிச்சயமாக இடம் உண்டு.அந்த இடத்திற்கு உரிய மரியாதையும இங்கே கிடைக்கும்.
ஒரு வசனகர்த்தாவுக்கு அடிப்படைத் தகுதி என்று எதைக் கூறுவீர்கள்?
இயற்கையாகவே எதார்த்தவாதியாகவும், நல்லது கெட்டதைக் களைந்தெடுத்து மக்கள் மனதை வளப்படுத்த வேண்டும்.
முக்கியமாக சமூக அக்கறை வேண்டும்.
கதை கடவுள் பற்றியதாக இருந்தாலும், கடவுள் அற்றதாக இருந்தாலும்,
மக்கள் மனதுடன் நேருக்கு நேர் பேச வேண்டும்.

திரையுலகில் உங்களுக்கான வாய்ப்புகள் எப்படி வருகின்றன?
எனக்கு இசைத்துறையில் அடித்தளம் இட்டவர் ஜீவன்.நான் வேலை சுரேஷ்,எத்தன் சுரேஷ்,பால்கி, சரவணன்,விஜய சேகர், குமரப்பா,ஆ.கருப்பையா போன்றவர்களிடம் இயக்குநர் துறையில் பணியாற்றி இருக்கிறேன்.அந்த நட்பு வட்டம் பெருகி நிறைய நண்பர்களை அடைந்து இருக்கிறேன்.எந்தப் படத்தையும் என் சொந்தப்படம் போல் தான் நினைத்து உழைப்பேன். அதற்கு என்னுடைய அதிகபட்ச உழைப்பைக் கொடுப்பேன். என்னால் முடிந்தளவு பிற துறைகளிலும் எனது ஆலோசனைகளை வழங்குவேன். வேலைகளை எளிதாக்க உதவுவேன். உதாரணத்திற்கு விஜயானந்த் படத்தில் பாத்திரங்களுக்கு டப்பிங் பேச வருபவர்களுக்கு நானே ஒரு சவுண்ட் ட்ராக் பேசி பதிவு செய்து கொடுத்திருந்தேன். அதைக் கேட்டு விட்டு டப்பிங் பேச வந்தவர்களுக்கு , வேலை மிகவும் சுலபமாகி விட்டது.
பேச்சுத் தொனி எப்படி இருக்க வேண்டும் என்று தானாகவே புரிந்து கொண்டு அவர்களாகவே பேசி ரீடேக் வாங்காமல் விரைவிலேயே முடித்துக் கொடுத்தார்கள்.இப்படி எந்தப் பணியையும் சுலபமாக்குவது என்னுடைய வழக்கம்.
அதனால் என்னை விட மாட்டார்கள்.நான் எப்போதும் நேர்நிலையாகச் சிந்திப்பவன்.
மனம் தளர்ந்து பேசுபவர்களிடமும் அவநம்பிக்கை கொள்பவர்களிடம் நான் நம்பிக்கையாகத்தான் பேசுவேன் .அது எனக்கு நல்ல வழிகளைக் காட்டியுள்ளது. என்னிடம் பேசினால் போதும் நம்பிக்கை வந்துவிடும் என்று சொல்வார்கள்.
இதில் மூடநம்பிக்கை என்றெல்லாம் ஒன்றுமில்லை. இயற்கையாகவே நம்பிக்கையுடன் ஒரு காரியத்தைச் செய்யும்போது அதில் வெற்றி கிடைக்கும். மதுரகவியிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தால் சிறப்பாகச் செய்வார் என்கிற நல்ல பெயர் எடுத்துள்ளேன். இப்படி என்னைப் புரிந்து கொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் திரையுலகில் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் மூலம் ஒருவர் மூலம் ஒருவராகத் தான் எனக்கு வாய்ப்புகள் வருகின்றன.

இவ்வளவு செய்தும் ஒரு முகம் தெரியாத மனிதராகவே இருக்கிறீர்களே?
அதைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை .வேலை வேலை என்று ஓய்வு இல்லாமல் போய்க்கொண்டே இருப்பதால் அதைப் பற்றி நான் யோசிக்க நேரமில்லை. என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். சரியான உழைப்புக்குப் பலன் உண்டு என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் எப்போதுமே அவ நம்பிக்கை கொள்பவன் அல்ல.
அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புகிறவன். அதன்படி என் வாழ்க்கைப் பாதை போய்க்கொண்டே இருக்கிறது. எனக்கான காலம் வரும் போது எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர்கோபி நயினார் எனது ஆரம்பகால நண்பர் தான். அவர் அறம் படம் எடுத்த போது அவரது வயது 60. இருந்திருக்கலாம்.அதற்குப் பிறகு அவர் பேசப்படவில்லையா..? அப்படி தாமதம் ஆனாலும் நான் தனித்துத் தெரியும் காலம் ஒரு நாள் வரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் நம்பிக்கை தானே வாழ்க்கை? என்கிறார் மதுரகவி
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]