அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
அதன்பின்பு இதற்கு காரணமாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் டிடிவி தினகரன்.
மேலும் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலையை பற்றி தொடர்ந்து புகழ்ந்து வரும் டிடிவி தினகரன் அதே விகிதத்தில் நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
“2024 நாடாளுமன்ற தேர்தலின் போது அப்போதைய மாநில தலைவர் சகோதரர் அண்ணாமலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓபிஎஸ் உள்ளிட்டோரை மிகுந்த முயற்சிக்கு இடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்தார்.
ஆனால் இப்போது வந்திருக்கும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணியில் இருந்து கட்சிகள் போனால் போகட்டும் என்ற நிலையில் தான் இருக்கிறார். நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கூட்டணி கட்சிகளை கையாளர்கள் தெரியவில்லை. மேலும் அவர் வேறொரு உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்” என்றெல்லாம் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார் டிடிவி தினகரன்.
இதற்கு பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரனும் பதில் அளித்துள்ளார்.
“எனக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே தனிப்பட்ட விதத்தில் பிரச்சினை இல்லை. கூட்டணியில் இருந்து வெளியேற நான்தான் காரணம் என டிடிவி தினகரன் எதன் அடிப்படையில் கூறுகிறார்? திடீரென என் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பலமுறை பேசியபோதும் அவர் என்னிடம் எந்த கருத்தையும் சொல்லவில்லை. டிடிவி தினகரன் பேசியது மன வருத்தத்தை தருகிறது.
தற்போதைய கூட்டணியை உருவாக்கியவர் அமித்ஷா. நான் மாநில தலைவர். தேசிய தலைமை எடுக்கும் முடிவை எங்களால் தடுக்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்பதெல்லாம் கிடையாது. கூட்டணிதான் முக்கியம். எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை ஏற்கவில்லை என டிடிவி தினகரன் கூறுகிறார்.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக வெற்றிபெற வேண்டும் என நெல்லை மாநாட்டில் அண்ணாமலை நேரடியாக அறிவித்தார்.
செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்டது அவர்களில் கட்சி விவகாரம். இதில் நான் கருத்து சொல்ல முடியாது. தான் கோவிலுக்கு செல்வதாக செங்கோட்டையனே கூறிவிட்டார். டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க அவர் செல்லவில்லை” என்று பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்.
டிடிவி தினகரனுக்கும் நைனார் நாகேந்திரனுக்கும் இடையில் என்ன பிரச்சனை என பாஜக அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.
“அதிமுகவில் இருந்தபோது நயினார் நாகேந்திரனின் வளர்ச்சியை பிடிக்காமல் சசிகலா தரப்பினர் அவருக்கு பலத்த முட்டுக்கட்டைகளை போட்டனர்.
இந்த நிலையில் தான் 2016-ல் ஜெயலலிதா இறந்த பிறகு இனியும் அதிமுகவில் தன்னால் காலம் தள்ள முடியாது என்று முடிவெடுத்து பாஜகவில் இணைந்தார் நைனார் நாகேந்திரன்.
மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் மாநில தலைவராகி இருக்கிறார்.
அண்ணாமலை தலைவராக இருந்தபோது அதிமுக கூட்டணி அமைய எதிர்ப்பு தெரிவித்தார். பாஜக தலைமையில் தனி அணி அமைய வேண்டும் என்று அண்னாமலை விரும்பினார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது சோதனை முயற்சி தோல்வி அடைந்ததால், மீண்டும் விரும்பவில்லை தேசியத் தலைமை.
எனவே அதிமுகவோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேசிய தலைமை முடிவெடுத்துதான், அதிமுகவுக்கு இணக்கமான நயினாரை தலைவராக்கியுள்ளனர்.
மேலும் அதிமுகவில் இருந்தபோதே நயினாருக்கும் மன்னார்குடி வகையறாவுக்கும் ஆகாது. நயினாரின் அமைச்சர் பதவி பறிபோகவும் காரணமே சசிகலாதான்.’
எனவேதான் அந்த கசப்பினை இப்போது வைத்து எடப்பாடியோடு நெருக்கம் பாராட்டுகிறார் நயினார் என்கிறார்கள்.
நமது அரசியல் டுடே வார இதழில் வாக்கிங் டாக்கிங் பகுதியில் எடப்பாடி- நயினார் மாஸ்டர் பிளான் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், நெல்லையில் நயினார் நாகேந்திரன் வீட்டில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளித்தார்.
அப்போது எடப்பாடியிடம் நயினார் நாகேந்திரன், ‘முக்குலத்து அமைப்புகளிடம் நான் ஏற்கனவே பேச ஆரம்பித்துவிட்டேன். ஓபிஎஸ் திமுக பக்கம் சாய ஆரம்பித்தால், அதிமுக தொண்டர்களின் கடும் கோபத்துக்கு அவர் ஆளாகிவிடுவார். அதேநேரம் டிடிவி தினகரன் நம்மோடு இருப்பார். நானும் தினகரனும் முக்குலத்து வாக்குகளை நம் அணிக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்துகிறோம். சசிகலா அம்மையார் இரட்டை இலையைத்தான் ஆதரிப்பார். எனவே ஓபிஎஸ் சால் நமக்கு சிக்கல் எதுவும் இருக்காது’ என்று கூறியிருக்கிறார். இந்த மாஸ்டர் பிளானில் எடப்பாடியும் சில ஆலோசனைகளை நயினாருக்கு கூறியிருக்கிறார். ஏற்கனவே இருவரும் அதிமுகவில் சேர்ந்து பயணித்தவர்கள் என்பதால் சேர்ந்து செயல்படுவதில் இவர்களுக்கு சிக்கல் இல்லை” என்று வெளியிட்டிருந்தோம்.
ஆக, டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டதால் அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தக்க வைக்க நயினார் நினைத்திருந்தார்.
ஆனால் ஓபிஎஸ் வெளியேறியவுடன் டிடிவி தினகரனும் திடீரென முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டு கூட்டணியில் இருந்து விலகிவிட்டார்.
தமிழ்நாடு பாஜகவில் மதிக்கப்படவில்லை என்ற கோபத்தில் இருக்கும் அண்ணாமலை, தான் உருவாக்கிய கூட்டணியை கலைத்து வருகிறார் என்றும் பேச்சிருக்கிறது.
ஆனால் டிடிவி தினகரனை கூட்டணிக்குக் கொண்டுவர நயினார் தொடர்ந்து முயற்சிக்கிறார்.
