• Thu. Feb 13th, 2025

பாகிஸ்தானில் அடுத்து என்ன நடக்கும்?

பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த மார்ச் 28 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.

ஆனால், துணை சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்திட மறுப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் நாடாளுமன்றத்தை கலைத்து, தேர்தலை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார். அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு அதிபர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டார். இது, எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை மேலும் அதிகரித்து.அச்சமயத்தில், திடீரென என்ட்ரி கொடுத்த உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை உடனடியாக நடத்த உத்தரவிட்டது. அதன்படி, நீண்ட இழுப்பறிக்கு பிறகு இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மீதான வாக்கெடுப்பு தொடங்கியது.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில், நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்க்கவே, அவர்கள் ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது.

உடனடியாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை துவங்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு வாக்குப்பதிவு நடத்த இடைக்கால சபாநாயகராக அசாத் கைசர் நியமிக்கப்பட்டு, வாக்கெடுப்பு தொடங்கியது. இதன் முடிவுகள் 1.30 மணிபோல் அறிவிக்கப்பட்டன. இதில் இம்ரான் கான் தோல்வி அடைந்தார். அதாவது, 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற அவையில், இம்ரான் கானின் ஆட்சி தொடர 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் இம்ரான் கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் இம்ரான் கான்.

இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயருக்கு இம்ரான்கான் ஆளாகியுள்ளார் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து, இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினர்.

எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால்,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றம் ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான அமர்வுக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸின் அயாஸ் சாதிக், புதிய பிரதமருக்கான வேட்புமனுக்கள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும், பிற்பகல் 3 மணிக்குள் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பை எதிர்கட்சிகள் தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 2018 இல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்ரான் கான், பொருளாதார முறைகேடு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொண்டார். பாகிஸ்தானின் எந்தப் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடித்ததில்லை.