• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்..,

ByKalamegam Viswanathan

Jul 20, 2025

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி ஆக பணியாற்றி வந்த பல்வீர்சிங் விசாரணைக்காக வந்த இளைஞர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன் பல்வீர் சிங்கை பாதுகாக்க தமிழக அரசு முயற்சித்து வருவதாக மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று மதுரையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருநெல்வேலி முதன்மை நீதிமன்றம் (JM No:1) முன் நிலுவையில் உள்ள நான்கு காவல் சித்திரவதை வழக்குகளில் பல்வீர் சிங் ஐபிஎஸ் மற்றும் அவருடைய குழுவில் உள்ள 13 பேர் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் காவலர்கள் (Constables) கொலையாளிகளாக உறுதிசெய்யப்பட்டதால் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அரசின் விரைவான நடவடிக்கை மற்றும் உயர் நீதிமன்றத் தலையீடு இவ்வழக்கை விரைவுபடுத்தி தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

காவல் சித்திரவதை வழக்குகளில் ‘கட்டளை இடும் அதிகாரமும் பொறுப்பும்’ (Command & Responsibility) கொண்ட பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் தண்டனையில் இருந்து தப்பிப்பதோடு அவர்களது பணியை தொடர்கின்றனர். இது பல்வீர்சிங் வழக்கில் அவரும் மேலும் அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற காவல்துறையினர் இன்றும் பணியைத் தொடர்ந்து வருகின்றனர். பல்வீர்சிங் வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்; அவர்கள் ஜாமீனில் வெளியே வந்த பிறகுதான் உண்மை வெளிவந்தது. காவல்துறை தங்கள் அதிகாரத்தால் மூன்று வாரங்களுக்கு மேல் இந்த உண்மையை மறைக்க முடிந்தது.

அமுதா ஐஏஎஸ்சிடம் இருந்து இவ்வழக்கு தொடர்பான இடைக்கால அறிக்கை பெறப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் (W.P.(MD) No. 20059/2023] அவரது முழு அறிக்கை நகல் கொடுக்க கோரினோம். ஆனால் இதுவரை அந்த அறிக்கை எங்களுக்கு கிடைக்கப்பெறாததால் அமுதா ஐஏஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர உள்ளோம். மேலும் வழக்கு எண் W.P.(MD) No. 20255/2023ன் அடிப்படையில் உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தின் CCTV காட்சிகள் இன்னும் வழங்கப்படவில்லை. இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுகின்ற செயலாகும்.

சிபிசிஐடி விசாரித்து வரும் நான்கு வழக்குகளில் வழக்கு எண் CC No. 2419/2023 வழக்கில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு காவலர்களின் சாதி விவரங்களை மறைத்து, SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் தவிர்த்துள்ளது. ஆனால் இது ஆரம்பகட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்காக பதிவு செய்யப்பட்டது. இது வழக்கின் தீவிரத்தன்மையை பாதிக்கும்.

கடந்த 2023 மார்ச் 29ஆம் தேதி அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டமன்றத்தில், பல்வீர் சிங் ஐபிஎஸ் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டு பின் பணியிடை நீக்கம் செய்யபட்டதாக அறிவித்தார். மேலும் 2024 ஜனவரி 22-24-இல் அவர் மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் முழுமையான ஊதியம் பெற்று, 2024 மார்ச் 18 முதல் டில்லி திகார் சிறையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு VIII படையில் உதவி கமாண்டண்ட் ஆக பணியாற்றுகிறார்.

திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கின் முதல் விசாரணை 2023 டிசம்பர் 13 அன்று நடைபெற்றது. இதுவரை நடந்த 22 விசாரணைகளில் பல்விர் சிங் 10 முறை மட்டுமே நேரில் ஆஜராகியுள்ளார். வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கவில்லை. மேலும் இந்த சித்திரவதை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. காரணம் முக்கிய குற்றவாளி ஒரு காவல்துறை உயர் அதிகாரி என்பதுதான். இது சாதி சார்ந்த பாகுபாடல்லாமல் வேறு என்ன?மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. 2005 தீர்மானப்படி, நீதியும் நிவாரணமும் பெற உரிமை உள்ளது.

மேலும் CBCID, CC No. 2419/2023 வழக்கில் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டும். அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அமுதா IAS இறுதி அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களுக்கும் CBCIDக்கும் வழங்க வேண்டும். மேலும் அம்பாசமுத்திர காவல் நிலைய CCTV காட்சிகளை உடனடியாக வழங்க வேண்டும். சாதி வேறுபாடின்றி நான்கு வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மாநிலத்தில் நடந்த காவல் சித்திரவதைகளின்போது ஏற்பட்ட மரணங்களுக்கான பல வழக்குகளில், கு.வி.மு.ச 176(1)(a) பிரிவின் கீழ் நீதிமன்ற விசாரணைகள் நிறைவடையாத நிலை தொடர்கிறது. இது திட்டமிட்ட சட்டத் தாமதமாகும். மாவட்ட முதன்மை நீதிபதிகள் இதனை உடனடியாக கண்காணிக்க வேண்டும்.

உயர்நீதிமன்றம் சித்திரவதை மற்றும் காவல் மரண வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தி, நீதிமன்ற பதிவாளர்களும் சட்ட உதவி ஆணையங்களும் அவ்வப்போது கண்காணிக்க வேண்டியது அவசியம். MLA/MP வழக்குகளுக்குப் போன்று, மனித உரிமை நீதிமன்றங்களில் காவல் சித்திரவதை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் தினசரி விசாரணை அடிப்படையில் அமைய வேண்டும். இந்த வழக்குகளில், அனுபவமிக்க தனித்துவமான அரசு தரப்புவழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்ட வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.

சந்திப்பின்போது காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் செயலாளர் மீ. த பாண்டியன், வழக்கறிஞர் பாண்டியராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.