• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசு வாட் வரியை குறைக்கும் முன்பே நாங்கள் குறைத்துவிட்டோம் : பிரதமருக்கு நிதியமைச்சர் பதிலடி

கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை ரூ.5-ம், டீசல் வரியை ரூ. 10-ம் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதை சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் அதற்கு முன்பே செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான வாட் வரியில் ரூ.3 குறைத்ததாக அவர் கூறியுள்ளார்.

இதனால் தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு ரூ. 1,160 கோடி இழப்பு ஏற்படுவதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வந்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 2020-2021ம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வருமானம் ஒன்றிய அரசுக்கு ரூ.3,89,622 கோடியாக உயர்த்தப்பட்டு இருப்பதை பழனிவேல் தியாகராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதே நேரத்தில் உற்பத்தி வரியில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் ரூ. 838 கோடி மட்டுமே கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு இருந்ததை விட தற்போது பெட்ரோல் மீதான கூடுதல் வரி 200%மும் டீசல் மீதான கூடுதல் வரி 500%மும் ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். உற்பத்தி வரியில் இருந்து தான் மாநிலங்களுக்கு பங்கு கிடைப்பதாக தெரிவித்த அவர், கூடுதல் வரியில் இருந்து பங்கு கொடுப்பது இல்லை என்று கூறியுள்ளார். 2014 ஆகஸ்ட் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 75 ஆக இருந்ததாக குறிப்பிட்டு இருக்கும் அவர், 2021 ஏப்ரல் மாதம் ரூ.111 ஆக விலை உயர்ந்ததாக தெரிவித்தார்.

அதே போன்று 2014 ஆகஸ்ட் மாதம் 1 லிட்டர் டீசல் விலை ரூ. 47ஆக இருந்ததை குறிப்பிட்டு இருக்கும் அவர், 2021 ஏப்ரல் மாதம் ரூ.101 உயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே வரியை ஏற்றிய ஒன்றிய அரசு தான் வரியை குறைக்க வேண்டும் என்று கூறிய அவர், வாட் வரியை தமிழக அரசு உயர்த்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.