அதிமுகவில் கலகம்…
அண்ணாமலைக்கு ஸ்கெட்ச் போட்ட அமித் ஷா
சூடான டீயை சாப்பிட்டபடியே சண்முகமும் பாண்டியனும் வாக்கிங் தொடங்கினார்கள்.
“என்ன மிஸ்டர் பாண்டியன்… செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து டீயின் விலையையும் ஏற்றி விட்டார்கள். இனிமேல் ஒரு டீ 15 ரூபாயாம். டீக்கடைகள் விலையை ஏற்றுகின்றனர் என்றால் தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுவிட்டது என்று தான் அர்த்தம். தமிழ்நாட்டில் சிங்கிள் டீ விலை அதிகரித்த அதே நேரம், தேசிய அளவில் ஜிஎஸ்டி வரியை பெருமளவு குறைத்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஒரு பக்கம் அதிர்ச்சி ஒரு பக்கம் ஆறுதல் என்று இருக்கிறது நிலைமை” என சண்முகம் பேச்சை தொடங்கினார்.
ஆமாம் போட்டுக்கொண்ட பாண்டியன் செய்திகளை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
“சில மாதங்களுக்கு முன்பு வரை திமுக கூட்டணியில் பிரச்சனை… திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகளுக்கும் பிரச்சனை, திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பிரச்சனை, இந்த திமுகவுக்கும் மதிமுகவுக்கும் பிரச்சனை என்றெல்லாம் செய்திகள் வந்தன.
ஆனால் இப்போது அதிமுக பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டிருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு பிரச்சனைகள் தொடங்கிவிட்டன.
சில வாரங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். அதிமுக உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அமைப்பை நடத்தி வந்த ஓபிஎஸ் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். சில லட்சங்கள் வாக்குகளை வாங்கினார்.
கடந்த ஏப்ரல் மாதம் திடீரென அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பிறகு அதிமுக பாஜக கூட்டணி உறுதியானது.
அப்போது ஏற்கனவே இந்த கூட்டணியில் இருக்கிற எடப்பாடிக்கு மிகவும் எதிரிகள் ஆகிவிட்ட ஓபிஎஸ் டிடிவி ஆகியோரின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்றார் போல் அமித்ஷா சென்னை வந்தபோதெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்தை கூட்டவே இல்லை.
அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்ட நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி இனி ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவுக்குள் வருவாரா என்ற கேள்விக்கு காலம் கடந்துவிட்டது என்ற பதில் சொன்னார். அதே நேரம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணியில் இருக்குமா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்தார்.
ஆனால் நான் இருக்கும் போது டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர் இந்த கூட்டணிக்கு வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்ததாகவும், தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதே சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பதால் ஓபிஎஸ் டிடிவி ஆகியோர் இல்லாவிட்டாலும் முக்குலத்து வாக்குகளை பெற முடியும் எனவும் நயினாரும் எடப்பாடியும் நெல்லையில் நடந்த ஒரு விருந்தில் ஒரு டீல் போட்டனர். முக்குலத்து சமுதாயத்தில் இருந்து டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர் அரசியல் சக்தியாக உருவாவதை நயினாரும் விரும்பவில்லை. இதுபற்றி ஏற்கனவே அரசியல் டுடேவில் வாக்கிங் டாக்கிங்கில் பேசியுள்ளோம். அதன் அடுத்த கட்டமாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இவர்கள் இருவரையும் வைத்திருப்பதற்கு தமிழக பாஜகவும் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் தான் ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே சென்றுள்ளனர்.
பாஜகவின் புதிய மாநில தலைவராக வந்திருக்கும் நயினார் நாகேந்திரன் இந்த விஷயத்தில் எடப்பாடி யோடு ஒருமித்த கருத்து கொண்டவராக இருக்கிறார்.
ஆனால் ஏற்கனவே மாநில தலைவராக இருந்த அண்ணாமலை 2024 இல் இவர்களை வைத்துதான் மூன்றாவது அணியை அமைத்தார். டிடிவி ஓபிஎஸ் ஆகியோரை பாஜக நிச்சயமாக கைவிடாது என அவர் ஏப்ரல் மே மாதங்களில் கூறி வந்தார்.
ஆனால் புதிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனைப்படி தேசிய தலைமை வேறுவிதமாக யோசிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார் அண்ணாமலை.
இந்த நிலையில் தான் தான் உருவாக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை தானே கலகலக்க செய்வது என்ற அடிப்படையில் டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோரோடு அண்ணாமலை ஆலோசித்ததாகவும்… அதையடுத்து இவர்கள் இருவரும் சொல்லி வைத்தார் போல கூட்டணியில் இருந்து விலகி வருகிறார்கள் என்றும் பாஜகவிலேயே பேச்சு இருக்கிறது.
அதாவது அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு அவருக்கு கட்சியில் புதிய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் அவர் தொடர்ந்து ஓரங்கட்ட ப்பட்டு வருகிறார். சமீபத்தில் பாஜகவின் அறிவிக்கப்படாத தமிழ்நாடு பொறுப்பாளராக இருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடத்திய கூட்டத்திலும் அண்ணாமலைக்கு அழைப்பில்லை. அதேபோல உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் தமிழ்நாடு மாநில பாஜக நிர்வாகிகளை தன் வீட்டுக்கு அழைத்து சந்தித்த கூட்டத்துக்கும் அண்ணாமலைக்கு அழைப்பு இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் தன்னை புறக்கணிக்கும் மாநில தலைமைக்கும் தேசிய தலைமைக்கும் தான் யார் என்று காட்ட வேண்டும் என முடிவெடுத்துள்ளார் அண்ணாமலை.
அதன் வெளிப்பாடாகத்தான் அண்ணாமலையோடு இணக்கமான உறவில் இருந்து வந்த பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறார்கள். அண்ணாமலையோடு நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இவர்கள் விலகி இருக்கிறார்கள் என டெல்லி பாஜக தலைமைக்கு நம்பகமான தகவல் சென்றுள்ளது. அதனால்தான் அண்ணாமலை செப்டம்பர் 4 ஆம் தேதி செய்தியாளர்களிடம், ‘நான் டிடிவி அண்ணனிடம் பேசினேன். அவரது முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி கேட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
ஒருவேளை அண்ணாமலை தனக்கு முக்கியத்துவம் வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறாரா… ஓபிஎஸ் டிடிவி இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு, நான் அவர்களை பேசி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருகிறேன் என ஒரு காட்சியை அரங்கேற்றப் போகிறாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.
அதே நேரம் அண்ணாமலை மீது ஏற்கனவே டெல்லிக்கு தொடர் புகார்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில்… தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை கலைக்கும் வேலையை அமைதியாக அரங்கேற்றி வருகிறார் என அவர் மீது அடுத்த புகாரும் டெல்லிக்கு சென்று சேர்ந்துவிட்டது.
இது மட்டுமல்ல பாஜக மாநில தலைவராக மட்டுமே இருந்த அண்ணாமலை எத்தனை 100 கோடிகள் சொத்து சேர்த்திருக்கிறார் என்றும், இப்போது கோவையில் உருவாகி வருகிற புதிய டவுன்ஷிப்பில் அண்ணாமலையின் பங்கு என்ன என்பது பற்றியும் ஆவண ரீதியாக டெல்லிக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே அண்ணாமலை மீது அமித்ஷா எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் இப்போதைய நிலவரம். ஆனால் இதை தவிர்ப்பதற்கு தனக்குள்ள பல்வேறு லாபிகள் மூலம் அண்ணாமலை தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்” என்று மூச்சு முட்ட சொல்லி முடித்தார் பாண்டியன்.
இதைக் கேட்டுக் கொண்டு அடுத்த செய்தியை சொன்னார் சண்முகம்.
”ஏற்கனவே அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் தற்போது பேசு பொருளாகி இருக்கிறார். அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் அனைத்து பிரிவு தலைவர்களும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என செங்கோட்டையனிடம் ஏற்கனவே பல நிர்வாகிகள் வலியுறுத்தி வந்த நிலையில் அதைத்தான் இப்போது எதிரொலித்திருக்கிறார் செங்கோட்டையன். ஏற்கனவே எடப்பாடி யோடு சலசலப்பு ஏற்பட்டு பிறகு சமரசமானார் செங்கோட்டையன். ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையின் விரும்பாத சில நியமனங்களை ரத்து செய்தார் எடப்பாடி. இப்படிப்பட்ட நிலையில்தான் ஒருங்கிணைந்த அதிமுக என்று கோரிக்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் செங்கோட்டையன்” என்ற செய்தியை சண்முகம் சொல்லி முடிக்க, லேசாக மழை தூற ஆரம்பித்தது.
மேக வெடிப்பு வந்துவிடுமோ என எச்சரிக்கையில் இருவரும் விரைந்து வீட்டுக்கு புறப்பட்டனர்.
பாக்ஸ்
பாஜகவில் நயினார் மகனுக்கு புது பதவி!
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு நயினார் நாகேந்திரன் கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.
அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ள நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக தன்னுடைய மகன் நயினார் பாலாஜியை நியமித்துள்ளார்.
மோடியும் அமித்ஷாவும் மூச்சுக்கு 300 முறை வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என திமுக காங்கிரஸை நோக்கி விமர்சனங்களை வீசி வரும் நிலையில், மாநிலத் தலைவர் பதவிக்கு வந்த ஐந்து மாதங்களில் தன்னுடைய மகனுக்கு கட்சியில் பதவி கொடுத்திருக்கும் நயினார் நாகேந்திரனின் செயலை பாஜகவிலேயே பலரும் ரசிக்கவில்லை
