புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வி.பி. சிவகொழுந்துவின் சகோதரரான வி.பி ராமலிங்கம் ,22-3-1962 ஆண்டு பிறந்தார் .இவர் 2019-ல் இருந்து பாஜக உறுப்பினராக இருந்து வந்தார், அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பணியாற்றிய இவருக்கு 2021 மே 11-ம் தேதி நியமன சட்டமன்ற உறுப்பினாக தேர்வு செய்யப்பட்டார், அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றிய அவர் கடந்த 27-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் தற்போது தலைவராக இருக்கும் செல்வ கணபதியின் பதவி காலம் முடிய உள்ள நிலையில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பாஜக தலைவர் செல்வகணபதி முன்மொழிய பாஜக தலைவர் பதவிக்கு வி.பி.ராமலிங்கம், தேர்தல் நடத்தும் அதிகாரி அகிலனிடம் மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கலின் போது மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் சாய். சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வி பி ராமலிங்கம் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

இந்த நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தற்போதைய பாஜக தலைவர் செல்வ கணபதி, மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சசிவாயம் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனித்தனியாக மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை பாஜக தலைமை அலுவலகம் வந்த ராமலிங்கத்தை, அமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஜான் குமார் வருங்கால பாஜக தலைவர் அவர்களே என்று அழைத்தும்,..
அதற்கு பதிலாக வருங்கால அமைச்சர் பெருமகனே என்று ஜான் குமாரை, ராமலிங்கம் அழைத்தும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து நியமன சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ள செல்வம் படிக்கட்டில் ஏற முடியாததால் அவரது ஆதரவாளர்கள் வரை அலுவலகத்திற்கு தூக்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.