• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே ஆயுத பூஜை போல வடநாட்டவர்கள் கொண்டாடிய விஸ்வகர்ம விழா

ByKalamegam Viswanathan

Sep 18, 2024

மேற்கு வங்காளம் கல்கத்தா பகுதியைச் சேர்ந்த சுமார் 50 இளைஞர்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மன்னாடிமங்கலம் இடையே வைகை ஆற்று பகுதியில் பாலம் கட்டும் பணியில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் வருடம் தோறும் ஆயுத பூஜை கொண்டாடுவது போல் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்மா பூஜை செய்து வருகின்றனர். இந்த தினத்தை முன்னிட்டு இவர்கள் விரதம் இருந்து விஸ்வகர்ம சுவாமி படத்தை வைத்து அலங்கரித்து, வண்ண மின்சார விளக்குகளால் அலங்காரம் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை தாங்கள் வேலை பார்ப்பதற்கு அருகில் உள்ள வைகை ஆற்றுக்குச் சென்று மண்பானையில் தண்ணீர் நிரப்பி வைத்து பூஜைகள் செய்து பட்டாசு வெடித்து ஊர்வலமாக வந்தனர்.

பின்பு விஸ்வகர்மா படத்தின் முன்பாக மண்பானையில் கொண்டு வந்த தண்ணீரை வைத்து விஸ்வகர்மா சுவாமி வரைந்த பொம்மையை வைத்து ஆடைகள் அணிவித்து பூமாலையால் அலங்கரித்தனர்.

இவர்கள் வேலை செய்யக்கூடிய ஆயுதங்கள் அனைத்தையும் அலங்காரம் செய்யப்பட்ட இடத்தின் முன்பு வைத்து சந்தனம் குங்குமம் வைத்து பூ மாலை அணிவித்து வங்காள மொழியில் அர்ச்சனை செய்து பூஜைகள் செய்தனர். இதைத் தொடர்ந்து இங்கு உள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

இதுகுறித்து இங்கு வேலை செய்யும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஷ்துதேவ் கூறும்பொழுது..,

இந்த தமிழ்நாட்டில் ஆயுத பூஜை எப்படி கொண்டாடுவார்களோ, இதே போல் எங்கள் மேற்கு வங்காளம் கல்கத்தா பகுதியில் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்ம பூஜா வருடந்தோறும் நடத்துவோம்.

சுமார் பத்து ஆண்டுகளாக ராமநாதபுரம், பாலமேடு இதைத் தொடர்ந்து இங்கு வேலை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் இங்கு பணி புரியக்கூடிய கம்பெனியில் சுமார் 50 பேர் வேலை செய்து வருகிறோம்.

எங்கள் நாட்டின் வழக்கப்படி நாங்களும் எங்களை சுற்றி உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் விஸ்வகர்மாவை வணங்கி தேங்காய் உடைத்து அபிஷேகம் செய்தோம். இது எங்கள் நாட்டில் விழா எடுத்து செய்வதுபோல் நாங்கள் உணர்கிறோம். இப்பகுதி மக்கள் எங்களோடு நல்லுறவாக பழகி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி அனைத்தும் நேரடியாக எங்கள் செல்போன் மூலம் உறவினருக்கு வீடியோ அனுப்பினோம். இதைப் பார்த்த உறவினர்கள் நம் நாட்டில் நடப்பதை காட்டிலும் அங்கு சிறப்பாக நடத்துகிறீர்கள் என்று எங்களிடம் கூறினார்கள். எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

இது குறித்து இன்ஜினியர் சாமிவேல் மற்றும் மேற்பார்வையாளர் சிவா ஆகியோர் கூறும் போது..,

இவர்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த கல்கத்தா பகுதியை சேர்ந்தவர்கள்.

எங்களிடம் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகின்றனர். செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்மா பூஜை செய்கின்றனர். அவர்கள் மட்டுமல்லாது நாங்களும் இங்கு பணிபுரியும் மற்ற மாநிலம் சேர்ந்தவர்களும், நமது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்து, அன்னதானம் வழங்கி வருகின்றனர். இது இந்திய நாட்டின் இறையான்மையையும் மற்றும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.