• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ‛விநாகயர் சதுர்த்திப்பெருவிழா’ கொடியேற்றத்துடன் தொடக்கம்…

Byகாயத்ரி

Aug 22, 2022

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் ‛விநாகயர் சதுர்த்திப்பெருவிழா’துவங்கியது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் பிரசித்தி பெற்ற குடவரைக் கோயிலாகும். நகரத்தாரின் நிர்வாகத்தில் நடைபெறும் இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‛சதுர்த்திப் பெருவிழா’பத்து நாட்கள் நடைபெறும். இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 9:30 மணிக்கு கொடிப்படம், சண்டிகேஸ்வரர் கோயிலிலிருந்து புறப்பாடாகி கோயிலை வலம் வந்தனர். தொடர்ந்து உற்சவ விநாயகர்,சண்டிகேஸ்வரர், அங்குசத் தேவர் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.

தொடர்ந்து கொடி ஸ்தாபித்தல் பூஜைகள் நடந்து கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கான சிறப்பு பூஜைகள், அலங்காரத் தீபாராதனை நடந்தது. இன்று இரவில் தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் திருவீதி வலம் வருவார். நாளை முதல் தினசரி காலை 9:00 மணி அளவில் விநாயகர் வெள்ளிக் கேடகத்தில் புறப்பாடும், இரவில் வாகனங்கள் வீதி உலாவும் நடைபெறும்.

கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழாவில் 6ம் திருநாளில் கஜமுகசூரசம்ஹாரமும், 9ம் திருநாளில் தேரோட்டமும் நடைபெறும். அன்றைய தினம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். பத்தாம் நாள், விநாயகர் சதுர்த்தியன்று காலையில் கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், மதியம் மூக்குரணி மோதகம் மூலவருக்கு படையலும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவுடன் விழா நிறைவடையும். தினசரி மாலையில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெறும்.