• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கிராம மக்கள் மதுரை வருகை தரும் முதலமைச்சரை நோக்கி கவன ஈ ர்ப்பு பேரணி..,

ByKalamegam Viswanathan

Mar 7, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து போராடி வரும் கிராம மக்கள், இன்று மதுரை வருகை தரும் தமிழக முதலமைச்சரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால் கல்லணை பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

​​திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கல்லணை, டி.புதூர், அச்சங்குளம், லட்சுமிபுரம் ஆகிய நான்கு கிராமங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இந்தக் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், வெடி சத்தத்தாலும் தூசியாலும் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்தகாலப் போராட்டங்கள்: கடந்த நான்கு மாதங்களாக இப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதில் குறிப்பாக:​’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புறக்கணிப்பு.
​திருமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலக முற்றுகை மற்றும் அமைதிப் பேரணி.
​மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவ வீரர்களுடன் இணைந்து நடத்திய போராட்டம். என ​மக்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, திருமங்கலம் ஆர்.டி.ஓ (RDO) சிவஜோதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கல்லணை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குவாரிகள் மற்றும் கிரஷர்களில் ஆய்வு மற்றும் அளவீடு பணிகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆய்வு முடிந்து பல நாட்களாகியும், அதன் அறிக்கையை இதுவரை கிராம மக்களிடம் அதிகாரிகள் சமர்ப்பிக்கவில்லை. மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்பதில் தொய்வு நிலவுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் ​இன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அருகே உள்ள ராயபாளையத்திற்கு தமிழக முதலமைச்சர் வருகை தர உள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் குறைகளை நேரடியாக முதல்வரிடம் முறையிட கிராம மக்கள் முடிவு செய்து , ” மாண்புமிகு முதல்வரை நோக்கி மாபெரும் மக்கள் பேரணியாகச் செல்வோம்” என திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் காவல்துறை விழிப்புற்றது.

இதனையடுத்து ​ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கல்லணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நான்கு கிராமங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிகாலை முதலே குவிக்கப்பட்டுள்ளனர். கிராம மக்கள் ஒன்றுகூடி பேரணியாகச் செல்வதைத் தடுக்க முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

​பல மாதங்களாகியும் தீர்க்கப்படாத இப்பிரச்சினையில், அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என்பதே கிராம பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது அப்பகுதியில் நிலவி வரும் சூழலால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது..