• Sat. Apr 27th, 2024

கமல்ஹாசனை பின்பற்றும் நடிகர் விக்ரம்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’.

இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் இரசிகர்களுடன் கலந்துரையாடினர்.

இவ்விழாவினில் நடிகை மீனாட்சி பேசியதாவது…

விக்ரம் சாரை பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பைத் தருவார். நாமெல்லாம் சில வருடம் ஒரே விசயத்தைச் செய்தால் சலிப்பாகிவிடுவோம் ஆனால் அவர் 61 வது படத்திலும் முதல் படம் போல் உழைக்கிறார். அது அவரிடத்தில் மிகவும் பிடிக்கும் என்றார்.

நடிகை மிருணாளினி பேசியதாவது…

முதலில் விக்ரம் சாருடன் நடிப்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரது படங்களை தியேட்டரில் இரசிகையாகப் பார்த்து இரசித்திருக்கிறேன். அவருடனே நடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. இப்படம் உங்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் என்றார்.

நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி பேசியதாவது…..

தமிழில் எனக்கு முதல் படம்,இந்தப் படத்திற்காக நானும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். மிகச் சிறப்பான படைப்பாக வந்துள்ளது. உஙகள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் விக்ரம் பேசியதாவது…

நான் திருச்சிக்கு சிறு வயதில் வந்திருக்கிறேன். நிறைய சுத்தியிருக்கிறேன் அப்போதே செண்ட்ஜோசப் கல்லூரி பிடிக்கும். இக்கல்லூரியில் நீங்கள் படிப்பது பெருமை. ’கோப்ரா’ படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது.உங்களுக்கு அந்நியன் பிடிக்குமெனில், அது இதில் இருக்கிறது. அதைத்தாண்டி சயின்ஸ் ஃபிக்சன் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். அஜய் ஞானமுத்துவின் முதல் இரண்டு படங்களும் வித்தியாசமாக இருக்கும். அதே போல் இந்தப்படமும் மிக வித்தியாசமாகச் செய்துள்ளார். படம் மிக ஃப்ரெஷ்ஷான படமாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் படம் வருகிறது. உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி என்றார்.

நிகழ்வின் முடிவில் கல்லூரி மாணவர்கள் இணைந்து விக்ரமின் உருவப்படம் வரைந்த ஓவியத்தைப் பரிசாக அளித்தார்கள்.

திருச்சியைத் தொடர்ந்து மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் கோப்ரா பட விளம்பர நிகழ்ச்சிகளில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்கிறார்கள்.

நடிகர் கமல் விக்ரம் படத்துக்காகவும் நடிகர் கார்த்தி விருமன் படத்துக்காகவும் இப்படித்தான் ஊர் ஊராகச் சென்று விளம்பரம் செய்தார்கள். அப்படங்கள் பெரிய வசூலைப் பெற்றன. அந்த வழியில் இப்போது விக்ரமும் இறங்கி அடிப்பதால் கோப்ரா படமும் வெற்றிப்படங்களின் வரிசையில் சேரும் என்பது உறுதி என்கிறார்கள் திரையரங்குக்காரர்கள்.

அதோடு எல்லா முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களுக்கு இதுபோல் விளம்பரம் செய்யத்தொடங்கினால் நிச்சயம் பெரிய வசூல் பார்க்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *