• Sat. Sep 30th, 2023

ஜூலை 15ல் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம் ஆரம்பம்

Byவிஷா

Jul 14, 2023

ஜூலை 15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ‘விஜய் பயிலகம்’ தொடங்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் 2வது முறையாக மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19ஆம் தேதி படம் வெளியாகிறது. ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று கடந்த மே மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. முன்பாகவே பேச்சுவார்த்தை முடிந்தாலும், ஒரு படம் முடியும் தருவாயில் தான் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வழக்கமாக வைத்திருப்பார் நடிகர் விஜய். ஆனால், ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே ‘தளபதி 68’ படத்தின் அறிவிப்பு திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த ஆச்சர்யம் அடங்குவதற்குள், வரும் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடிகர் விஜய் அரசியலுக்குத் தயாராகி வருவதாகவும், அதனால் வெங்கட் பிரபு படத்தில் நடித்த பின் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருப்பதாகவும் செய்திகள் பரவின. இதன் முன்னோட்டமாக கடந்த மாதம் 234 சட்டசபை தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை சென்னைக்கு அழைத்து கல்வி உதவி விழாவுக்கு விஜய் ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிகழ்ச்சி திட்டமிட்டதை விட அதிக நேரம் எடுத்ததால், அதை ஒருங்கிணைத்த தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை, ஆனால் சமீபத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டது போல் ‘லியோ’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கல்வி உதவி வழங்கும் விழாவில், மாணவர்களிடம் பேசிய விஜய், அம்பேத்கர், பெரியார், காமராஜ் போன்ற தலைவர்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறிய நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் வரும் 15ம் தேதி இரவு பாட சாலை நிகழ்ச்சியை துவக்கி வைப்பதாக கூறப்பட்டது.
234 தொகுதிகளிலும் இரவு பாட சாலை திட்டத்தை தொடங்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு படிப்பகம், பயிலகம், அறிவொளியகம், கல்வியகம் ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளை குறிவைத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவு மற்றும் கல்வி உதவி வழங்கும் விழா விஜய் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தளபதி’ அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தளபதி ‘விஜய் பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *