வருகிற அக்டேபர் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு, முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வரிகளான ‘இது ராணுவக் கட்டுப்பாட்டு இயக்கம்’ என்ற வரிகளுடன் நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான குழுவினர் முழுவீச்சில் செய்து கொண்டிருக்கின்றனர். முதல் மாநாட்டுக்கு பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா அக்டோபர் 4 ஆம் தேதியான இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கு பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதுவும் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, தொண்டர்கள் மத்தியில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையான ’இது ராணுவ கட்டுப்பாடு இயக்கம்’ என்ற வார்த்தையை நடிகர் விஜய்யும் தன்னுடைய கடிதத்தில் பயன்படுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்திருக்கிறார்.
நடிகர் விஜய் எழுதியிருக்கும் கடிதத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான கால்கோள் விழா நடந்திருக்கிறது. இந்த முதல் மாநாடு நம் கழகத்தின் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. அந்த மாநாட்டில் பொறுப்பான குடிமகனாகவும், முன்னுதாரணமாகவும் கழகத்தினர் இருக்க வேண்டும். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும், நாட்டு மக்களும் உணர வேண்டும், நாம் உணர வைக்க வேண்டும். கொண்டாட்டம் இருக்கலாம், குதூகலம் இருக்கலாம். ஆனால் ஓரிடத்தில் கூடினால் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாக இருக்கும் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இவர்களுக்கு அரசியல் தெரியுமா?, மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டி நாம் பேருக்கு ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
வேகமாக இருப்பதைவிட விவேகமாக இருக்க வேண்டும், எதார்த்தமாக இருப்பதை விட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதா எப்போது பேசினாலும், பிரச்சாரதை மேற்கொண்டாலும் அதிமுகவை ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்ற சொல்வார். இப்போது அந்த வார்த்தையை தன்னுடைய கடிதத்தில் பயன்படுத்தி தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் நடிகர் விஜய்.
ஜெயலலிதா வரிகளுடன் த.வெ.க மாநாட்டுக்கு விஜய் அழைப்பு
