• Fri. Apr 18th, 2025

பொங்கலுக்கு வேட்டி, சேலை திட்டம்.. அறிவிக்கப்பட்ட டெண்டர்..!!

Byகாயத்ரி

Aug 24, 2022

பொங்கல் வேட்டி, சேலை திட்டத்துக்கு 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க டெண்டர் அறிவித்தது தமிழ்நாடு அரசு.

வேட்டி சேலை வழங்கும் திட்டம், தமிழக அரசினால் 1983-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சீரிய திட்டங்களில் ஒன்றாகும். பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கு தேவையான மொத்த சேலைகள் மற்றும் வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட ஏதுவாக வருவாய்த் துறைக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் கைத்தறி நெசவாளர்கள், பெடல்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வதுடன், தமிழகத்திலுள்ள கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 3.59 கோடி மக்களுக்கு பயனளிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் டன் பருத்திநூல் வாங்க டெண்டர் அறிவித்துள்ளது. 1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு செப்டம்பர் 9ம் தேதி கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. டெண்டர் அறிவிப்பால் கைத்தறி நெசவாளர்களில் 15,000 பேரும் விசைத்தறி நெசவாளர்களில் 54,000 பேரும் பலன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.