வேங்கை வயல் வழக்கு விசாரணையை பிப்ரவரி 1-ம் தேதிக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த 2022 டிசம்பரில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தது யார் என்பது குறித்து வேங்கை வயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன்பின் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி. போலீசார் தாக்கல் செய்தனர்.
அதில், வேங்கை வயலைச் சேர்ந்த மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் உண்மை குற்றவாளிகளைக் கண்டறியவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்த கோரிக்கை வலியுறுத்தி போராட்டங்களும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்து உள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் சார்பில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. அத்துடன் குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். மேலும் இவ்வழக்கை சிபிஐ விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இந்த மனு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.