• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வீரன் திரைவிமர்சனம்

’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த படைப்பு வீரன்

வீரனூர் என்ற கிராமத்தில் வசிக்கும் குமரனை (ஹிப்ஹாப் ஆதி) சிறுவயதில் மின்னல் ஒன்று தாக்கி விடுகிறது. இதன் காரணமாக அவரது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுவதால், அவரது அக்கா அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று விடுகிறார். மின்னல் தாக்கியதில் குமரனுக்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அவரால் அடுத்தவரது மூளையை கட்டுப்படுத்த முடியும், கைகளிலிருந்து மின்னல் சக்தியை வெளிப்படுத்த முடியும். அவர் வளர்ந்ததும் அவரது சொந்த ஊருக்கு வரப்போகும் மிகப்பெரிய ஒரு ஆபத்து குறித்து அடிக்கடி அவருக்கு கனவுகள் வருகின்றன. இதனால் வீரனூருக்கு கிளம்பி வருகிறார் குமரன். ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தக் கூடிய லேசர் பவர் டெக்னாலஜி என்ற திட்டத்தை ஒரு தனியார் நிறுவனத்தின் முதலாளியும் (வினய்) அவரது தம்பியும் அந்த ஊர் மக்களை ஏமாற்றி அங்கு செயல்படுத்த முயற்சிக்கின்றனர். ஊரில் இருக்கும் எல்லை தெய்வமான வீரன் கோயிலை இடித்தால் மட்டுமே அந்த திட்டத்தை தொடர முடியும் என்கிற நிலை. வில்லன்களின் திட்டத்தை அறிந்துகொள்ளும் ஆதி தனது சக்திகளின் மூலம், வீரனாக உருவெடுக்கிறார். அவரால் வில்லன்களின் சதியை முறியடிக்க முடிந்ததா என்பதே ‘வீரன்’ படத்தின் கதை.தமிழில் சூப்பர்ஹீரோ படங்கள் மிகவும் குறைவு.
மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படமும் பெரியளவில் பேசப்படவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
மலையாளத்தில் பேசில் ஜோசப் இயக்கத்தில் வெளியான ’மின்னல் முரளி’ படமும் இதே கிராமத்து சூப்பர்ஹீரோ கதைக்களம்தான். ஆனால் அப்படத்தில் இருந்த சூப்பர்ஹீரோ பின்னணிக்கான நியாயமும், அதற்கான மேக்கிங்கும் ‘வீரன்’ படத்தில் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் கூற வேண்டியுள்ளது.ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றால் ஒரு சாதாரண மனிதன், அவனுக்கு திடீரென கிடைக்கும் சக்திகள், அவனுக்கு நிகரான அல்லது அவனை விட பலமான வில்லன். இவை மூன்றும்தான் அடிப்படை. இப்படத்தில் முதல் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ஹீரோவுக்கு சமமான வில்லன் இதில் இல்லை. மெயின் வில்லனாக வரும் வினய்க்கு படம் முழுக்க ஓவர் பில்டப் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இறுதியில் காமெடி பீஸ் போல அவரது கதாபாத்திம் பப்படமாகிவிடுகிறது.
திரைக்கதை போரடிக்கவில்லை. படம் தொடங்கியது முதல் அடுத்தடுத்து காட்சிகள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இப்படத்தின் பிரச்சினையே ஒரு சூப்பர்ஹீரோ படத்துக்கான ஏற்ற இறக்கங்கள் எதுவும் இல்லாத மட்டையான கதை சொல்லல்தான். ஹிப்ஹாப் ஆதி தனக்கு எதுவருமோ அதை உணர்ந்து செய்திருக்கிறார்.
நாயகியாக வரும் ஆதிரா ராஜுக்கு படத்தில் வேலையே இல்லை. ஆதியின் நண்பராக வரும் சசி செல்வராஜ், பார்வை குறைபாடு கொண்ட தோட்டக்காரராக வரும் ஜென்சன், பிரசன்னா பாலச்சந்திரன், சாவித்ரி உள்ளிட்ட ‘நக்கலைட்ஸ்’ குழுவினர் அனைவரது நடிப்பும் வெகு இயல்பு. காளி வெங்கட் மற்றும் முனீஸ்காந்தின் காமெடி ஓரிரு இடங்களில் சிரிப்பு மூட்டினாலும், பல இடங்களில் எடுபடவில்லை.ஹிப் ஹாப் ஆதியின் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம், எழில் கொஞ்சும் மலை கிராமத்தின் அழகை தீபக் மேனனின் கேமரா கண்களுக்கு விருந்தாக்குகிறது. படத்தின் விசுவல் எஃபெக்ஸில் பெரிதாக மெனக்கெடல் இல்லை என்றாலும், படத்திலும் அதற்கான தேவை இல்லாததால் அது ஒரு குறையாகத் தெரியவில்லை.
படத்தில் ஊராட்சி மன்றத் தலைவரான சின்னி ஜெயந்த் ஹீரோ ஹிப்ஹாப் ஆதியால் கட்டுப்படுத்தப்பட்டு மாறி மாறி பேசும் காட்சி, முதல் இரண்டு தடவை சிரிப்பை வரவழைக்கிறது. ஆனால் அதற்காக அதையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பது எடுபடவில்லை. வில்லனின் தம்பி பத்ரி சாமியாடும் காட்சியிலும் இதேதான் நடந்துள்ளது. காமெடி என்று நினைத்து வைத்த காட்சி பெரிதாக எடுபடவில்லை. ஹீரோவுக்கு மின்னல் சக்தி கிடைப்பதற்கு பின்புலமாக எந்தக் காரணமும் படத்தில் சொல்லப்படவில்லை, சரி சூப்பர்ஹீரோ படங்களில் இது போன்ற லாஜிக்குகள் பார்க்க வேண்டியதில்லை என்றாலும் அதனை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி காட்சிப்படுத்தியிருக்க வேண்டாமா? சிலந்தி கடித்து ஸ்பைடர்மேன் ஆவதையும், வானத்தில் இருந்து வந்த ஏலியன் சூப்பர்மேன் ஆவதையும் பார்வையாளர்கள் நம்பியது அதற்கான நம்பகத்தன்மை அப்படங்களில் இருந்ததால்தான்.
மண்சார்ந்த சூப்பர்ஹீரோ என்ற கதைக்களம் சிறப்பானதுதான் என்றாலும், ஒரு சூப்பர்ஹீரோ படத்துக்கான காட்சியமைப்பும், சுவாரஸ்யமான மேக்கிங்கும் இல்லாததால் சுமாரான ஹீரோவாகவே நின்று விடுகிறான் இந்த ‘வீரன்’.