திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுகவின் வேட்பாளராக போட்டியிடும் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மல்லனம்பட்டி, பாப்பம்பட்டி, கோட்டூர்ஆவாரம்பட்டி, உலகம்பட்டி, சுக்காம்பட்டி சத்திரப்பட்டி உள்ளிட்ட அகரம் பேரூராட்சியில் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசிய போது கூறியதாவது: அகரம் மற்றும் தாடிக்கொம்பு பேரூராட்சியில் வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்து வாழ்கின்றனர். எனவே இப்பகுதி விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் திட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று நானும், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்தோம்.

அந்த மனுவில் வேடசந்தூர் தொகுதி, ஆத்தூர் தொகுதி, ஒட்டன்சத்திரம் தொகுதி, திண்டுக்கல் தொகுதி ஆகிய பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இப்பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தாலும் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தாலும் இப்பகுதி விவசாயிகளின் மிக முக்கிய பிரச்சனையான தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
அதன் அடிப்படையில் முதலமைச்சர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்தார். இதன் அடிப்படையில் சுமார் ரூ 4500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேல் நீரேற்று பாசன முறையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்பொழுது அந்த நீரை ராட்சத குழாய்கள் கொண்டு வேடசந்தூர், ஆத்தூர், திண்டுக்கல் ,ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் உள்ள பாசன குளங்களை ஆண்டிற்கு ஒரு முறையாவது நிரப்ப வேண்டும் என்பதற்காக திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் ஆய்வு அறிக்கை கொடுத்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சி 2.0 தொடங்கியதும் உடனடியாக முதல் சட்டப்பேரவை கூட்டத்திலேயே அறிவிப்பார்.

திமுக ஆட்சி அமைந்ததும் வரும் ஜூன் மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை ரூ 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கும் இத்தொகை வழங்கப்பட உள்ளது. குடும்பத் தலைவிகளின் தேவைக்கு ஏற்ப வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் வகையில் ரூ 8000 மதிப்புடைய கூப்பன்களை இரண்டு கோடியே 30 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்க உள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆத்தூர் தொகுதி, ஒட்டன்சத்திரம் தொகுதி, பழனி தொகுதியில் சில பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ 1700 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு பத்து எம்.எல்.டி குடிதண்ணீர் கிடைக்கும்.
இதில் தாடிக்கொம்பு மற்றும் அகரம் பேரூராட்சிக்கு இரண்டு எம்.எல்.டி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்படும் இதனால் நாள்தோறும் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.என்அதுபோலவே 750 கோடி மதிப்பீட்டில் வைகை அணையிலிருந்து குடிதண்ணீர் கொண்டு ஒரு திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

தேர்தல் பிரச்சாரத்தில்; பேரூராட்சி மன்ற தலைவர்கள் தாடிக்கொம்பு கவிதா சின்னத்தம்பி, அகரம் நந்தகோபால், துணைத்தலைவர்கள் ஜெயபால், நாகப்பன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் விவேகானந்தன், தகவல் தொழில்நுட்;ப அணி வாஞ்சிநாதன் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




