• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாணிஜெயராம் காலமானார்

பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம். அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவர் காலமானார்.
வாணி ஜெயராம் தனது வீட்டின் படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு அவர் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை – ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரிந்து வரும் மலர்க்கொடி கூறும்போது, “நான் எப்போதும் காலை 10.15 மணிக்கு வீட்டிற்கு வருவேன். அப்படித்தான் இன்றும் 10.45 மணி அளவில் வீட்டுக்கு வந்த காலிங்பெல் அடித்தேன். நான்கு, ஐந்து முறை பெல் அடித்தும் கதவை திறக்கவில்லை. அப்போது எனக்கு சந்தேகம் வந்ததது. பின்னர் போன் செய்தேன் எடுக்கவில்லை என் கணவரிடம் தொலைபேசியில் அழைக்கச் சொன்னேன். அவரும் ஐந்து முறை முயற்சித்தும் தொலைபேசி அழைப்பு எடுக்கப்படவில்லை. கீழ் வீட்டுக்காரரிடம் சென்னோம். பிறகு, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தோம். உள்ளே சென்று பார்த்தபோது அவர் படுக்கை அறையில் கீழே விழுந்து கிடந்தார். அவரது நெற்றியில் அடிப்பட்டிருந்தது. நான் 10 வருடங்களாக இங்கே பணி செய்து வருகிறேன். அவருக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது. எந்தப் பிரச்சினையுமில்லை. அவர் என் தாயைப் போல. நாங்கள் அம்மா – மகள் போல பழகுவோம்” என்றார் மலர்க்கொடி.
வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இசைக் குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம், ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு பாலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர். பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ள இவர், பல்வேறு மொழிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.