மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சார்பில் “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு பயணம், “சுரஷித் தட் சம்ருத பாரத் – பாதுகாப்பான கடற்கரை, வளமான இந்தியா” என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட உள்ளது.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோத ஊடுருவல் உள்ளிட்ட கடற்கரை பாதுகாப்பு சவால்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வையும் பங்குதாரர் பங்கேற்பையும் அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதனை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சைக்ளோதான் 2026 காணப் பாடல் வெளியிடப்பட்டது.
செய்தியாளர் சந்திப்பில் CISF தென்மண்டல ஐஜி எஸ்.ஆர். சரவணன் மற்றும் டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் பேசினர்.
அவர்கள் தெரிவித்ததாவது, இந்த சைக்கிள் பயணத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநில அமைச்சர் நித்யானந்த் ராய் வரும் ஜனவரி 28 ஆம் தேதி நியூ டெல்லி மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் இருந்து காணொளி முறையில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த சைக்கிள் பயணம் 25 நாட்களில் 6,553 கிலோ மீட்டர் தூரம் இந்தியாவின் முழு பிரதான நிலப்பகுதி கடற்கரையையும் உள்ளடக்கி நடைபெறுகிறது. 65 பெண்கள், 65 ஆண்கள் என 130 CISF வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இவர்களில் 11 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து வீரர்களும் ஒரு மாத காலம் பயிற்சி பெற்றுள்ளனர்.
மேற்கு கடற்கரையில் குஜராத்தின் லக்பத் கோட்டை மற்றும் கிழக்கு கடற்கரையில் மேற்கு வங்காளத்தின் பக்காலி ஆகிய இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு அணிகள் புறப்பட்டு, சூரத், மும்பை, கோவா, மங்களூர், விசாகப்பட்டினம், சென்னை, புதுச்சேரி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களை கடந்து பயணித்து, பிப்ரவரி 22, 2026 அன்று கொச்சியில் இரு அணிகளும் ஒன்றிணைகின்றன.
பயணத்தின் போது 52 கடலோர பகுதிகள், 3300 கடலோர கிராமங்கள் வழியாக சென்று, மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், CSR நடவடிக்கைகள், மரம் நடுதல், உடல்நலம், உடற்பயிற்சி உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துதல், வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு நினைவைக் கொண்டாடுதல், கடற்கரை சமூகங்களுடன் பாதுகாப்புப் படைகளின் உறவை மேம்படுத்துதல் ஆகியவையும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.
சென்னையில் 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கிராமப்புற பகுதியில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய பொதுநிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் CISF அதிகாரிகள் தெரிவித்தனர்.





