கோவை: சூழல் சுற்றுலா, வனப் பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆர்வலர்களை மையமாகக் கொண்டு, இந்தியாவின் முதல் பிரத்யேக பாதுகாப்பு அங்காடி என அறிமுகப்படுத்தப்படும் ‘வனக்காப்பான்’ மையம் கோவை வடவள்ளி, வெள்ளிங்கிரி நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

சூழல் சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தங்களது பாதுகாப்பான பயணங்களுக்குத் தேவையான பல்வேறு உபகரணங்களை ஒரே இடத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ தடுப்பு, வனவிலங்கு கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு தொழில்நுட்பங்கள், ஜிஎஸ்எம் கேமராக்கள், ட்ரோன் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்புத் தீர்வுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து வனக்காப்பான் நிறுவனர் சுமித் சபர்வாள் கூறுகையில், “தொழில்நுட்பம், சமூகப் பங்கேற்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகியவை ஒன்றிணைந்தால்தான் வனப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முடியும். நாடு முழுவதும் இதுபோன்ற பாதுகாப்பு மையங்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்,” என்றார்.
தொடக்க விழாவில் பங்கேற்ற வனரக்ஷக் தலைமை விற்பனை மேலாளர் ராஜேஷ் சாஹூ, மண்டல மேலாளர் சந்தீப் ஆனந்த், உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேலாளர் கௌரவ் ஹீர் ஆகியோர் கூறுகையில், “புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த நேரடி விற்பனை மையம் வெறும் வர்த்தக நோக்கத்துடன் மட்டும் செயல்படாது. சுய உதவிக் குழுக்கள், பெண்கள் தொழில்முனைவோர், பழங்குடியின கைவினைஞர்கள் மற்றும் வனத்தைச் சார்ந்த சமூகங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கவும் வனக்காப்பான் திட்டமிட்டுள்ளது,” என்றனர்.
மேலும், இளைஞர்களுக்கு ட்ரோன் இயக்கம், வனவிலங்கு மீட்பு, காட்டுத்தீ தடுப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் செய்முறைப் பயிற்சிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

புலிகள் காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் முக்கிய சூழல் சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலும் இதுபோன்ற மையங்களை அமைத்து, நாடு தழுவிய வனப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கும் நோக்கில் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் சூழல் சுற்றுலா ஆர்வலர்கள், மலையேற்ற வீரர்கள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








