• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆயுஷ்மான் பாரத் அட்டை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்

Byவிஷா

Apr 28, 2025

நோயாளிகளின் உடல்நிலை குறித்த விவரம் அறிந்து சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள அட்டை குறித்து மாநில சுகதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் முதல்வர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. உயிர்காக்கும் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை இழப்பீடு பெறவும் அனுமதிப்பதால் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் கிராம மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திட்டத்தில் 2,053 சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் 8 சிறப்பு உயர் சிகிச்சை, 52 முழு பரிசோதனை, 11 தொடர் சிகிச்சைகளும் அடங்கும். மேலும், 942 தனியார், 1,215 அரசு மருத்துவமனைகள் என 2,157 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
முதல்வர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையங்களில் பதிவு செய்தும், பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்ட அட்டையை பொதுசேவை மையங்களிலும் பதிவு செய்து பெறலாம். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்துக்கு வருமானச் சான்று, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டுகள், புகைப்படம் அவசியம்.
பிரதமர் ஆரோக்கிய திட்டத்துக்கு ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டுகள், பான் கார்டு, வங்கிக் கணக்கு விவரம், புகைப்படம் அவசியம். ஆனால், பிரதமர் ஆரோக்கிய திட்ட அட்டை 2011 மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும், தற்போது வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் காப்பீட்டுத் திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் அடையாள அட்டை பெற்றிருந்தால், வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது அம்மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவருக்கு முதல்வர் காப்பீட்டுத் திட்ட அட்டை மூலம் சிகிச்சை வழங்க முடியாது என்பதால், அவர்களுக்கு பிரதமர் ஆரோக்கிய திட்ட அட்டை மூலமே சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
நோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்லும்போதும் ஒவ்வொரு முறையும் தங்களது உடல்நிலை, ஏற்கெனவே பெற்ற சிகிச்சை விவரங்களைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. பெரும்பாலானோர் அந்த நேரத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு மட்டுமே சிகிச்சை பெறுவதால், தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.
இதை தவிர்க்க மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர் www.abha.abdm.gov.in என்ற வலைதளத்தில் பதிவுசெய்து, 14 எண் கொண்ட அடையாள அட்டையை (ஆபா) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பதிவு செய்து கொடுக்கின்றனர். தங்களது செல்போன் மூலமாகவும் பதிவு செய்துகொள்ள முடியும்.
வருங்காலங்களில் சிகிச்சைக்கு செல்லும்போது இந்த அட்டையை கொண்டுசென்றால் போதும். அதில் நோய், பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் எந்த ஊரில் வேண்டுமானாலும் சிகிச்சை பெற முடியும். ஏற்கெனவே சிகிச்சை பெற்ற ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை.
மேலும் ‘ஆபா’ அட்டையுடன் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளும் இணைக்கப்படும். இதனால் காப்பீடு அடிப்படையில், நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எந்த மருத்துவமனையிலும் இலவசமாக சிகிச்சை பெற முடியும்.
அதேநேரத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தாததால், இப்படியொரு திட்டம் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எனவே, தமிழக அரசு, முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதைப்போல, நோயாளிகள் நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு திட்டத்தையும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.