தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கிருத்திகா தேவி செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகள் மற்றும் தொடங்கப்பட்டு நிலுவையில் உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மீண்டும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், தமக்கு திமுக நிர்வாகிகள் அனைவரின் முழு ஆதரவும் உள்ளதாக தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்களே தன்னை நேரடியாக அழைத்து சென்று வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது, கட்சியின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார். “நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம் போன்றவர்கள்” என்று அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு செயல்படுகின்றனர் என்றும், இந்த ஒற்றுமையே கூட்டணியின் வெற்றிக்கான முக்கிய காரணமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகர் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர் எங்களுக்கு போட்டியாளர் அல்ல; எங்களுக்கு உண்மையான போட்டி அதிமுக தான்” என்று தெளிவாக கூறினார்.

மேலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது என்றும், மருத்துவராக இருப்பதால் தொடர்ந்து மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன், எனவே மக்களுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்தார். தனது குடும்பம் பல ஆண்டுகளாக திமுகவின் உறுதியான ஆதரவாளர்கள் என்றும், 2000 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
இன்னும் வருங்காலத்திலும் மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்து, தாம்பரம் தொகுதியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உறுதியாக உள்ளேன் என்று டாக்டர் கிருத்திகா தேவி தெரிவித்தார்.



