• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கிற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு

Byமதி

Dec 12, 2021

வரும் டிசம்பர் 16, 17-ந் தேதிகளில் அனைத்து வங்கிகளின் ஊழியர்களும், அதிகாரிகளும் தனியார் மயத்தை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு தமிழ்நாட்டில் இயங்கும் தேசிய, மாநில தொழிற்சங்கங்களின் சார்பில் ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தருவதற்காக, வங்கிகள் சட்ட (திருத்த) மசோதாவை, நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே பாராளுமன்றத்தில் மோடி அரசு வைக்கப்போகிறது.

வங்கியில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாத பெரிய நிறுவனங்கள் முன்பே இருந்தாலும் கூட, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு திருப்பித்தராத கடன் தொகையும், வங்கி மோசடிகளும் பல மடங்குகள் அதிகரித்துவிட்டன.

பதிமூன்று நிறுவனங்கள் 4 லட்சத்து 46 ஆயிரத்து 800 கோடி ரூபாயை கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் இருந்தன. இந்தக் கடனை அடைக்க இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களான மிட்டல், ரிலையன்ஸ், டாட்டா, வேதாந்தா உள்ளிட்ட 9 நிறுவனங்கள் முன்வந்தன. கடன் தொகையை வங்கிகளிடம் பேரம் பேசிக் குறைத்து, வெறும் 1,61,720 கோடி ரூபாய்க்கு அந்த 13 நிறுவனங்களின் மொத்தச் சொத்துக்களையும் வாங்கிக் கொண்டன. இதனால் 2 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் பெருமுதலாளிகளுக்கு லாபம்; பொதுத்துறை வங்கிகளுக்கு நஷ்டம்.

இதுவரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கச் செய்து, பிறகு கடனைத் தள்ளுபடி செய்த மோடி அரசு, இப்போது அந்த வங்கிகளையே கார்ப்பரேட்டுகளிடம் கொடுத்துவிட முடிவு செய்துள்ளது. இதுதான் ‘வங்கித்துறை சீர்திருத்தம்’ என்கிறார்கள்.

100 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை பொதுத்துறை வங்கிகளில் நம்பிக்கையோடு மக்கள் போட்டு வைத்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை அப்படியே தூக்கி, வாங்கிய கடனைக் கூட கட்டாத கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அரசு ஒப்படைப்பது பொது மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

வரும் டிசம்பர் 16, 17-ந் தேதிகளில் அனைத்து வங்கிகளின் ஊழியர்களும், அதிகாரிகளும் தனியார் மயத்தை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் இறங்குகிறார்கள்.

தேச நலன், பொதுமக்கள் சொத்து ஆகியவற்றை பாதுகாக்கும் இப்போராட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரிக்கிறோம். மத்திய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், வங்கி ஊழியர்களுடன் இணைந்து அனைத்துத்துறை தொழிலாளர்களும் போராட்டக் களமிறங்குவார்கள் என்பதை அறிவிக்கிறோம் என இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.