ஓங்கி ஒலித்த கோஷம்…
டென்ஷனான அன்புமணி
திண்டுக்கல் சுற்றுப்பயணம் செய்த மருத்துவர் அன்புமணி, தனது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாசுடன் ஒன்றிணைய வேண்டுமான கட்சியினர் கோஷமிட்டதால் கோபம் அடைந்தார்.
பாமகவில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், தலைவரான அன்புமணிக்கும் இடையே கடந்த 2024 இறுதியில் இருந்தே வெளிப்படையான மோதல் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக அது விஸ்வரூபமெடுத்து, இருவருக்கும் இடையிலான அதிகார யுத்தம் உச்சத்தை அடைந்தது.
தேர்தல் ஆணையம், அன்புமணியிடம்தான் கட்சி இருக்கிறது என்று தெரிவித்த நிலையில்.. தற்போது தமிழகம் முழுதும் தொடர் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார் அன்புமணி.
“உரிமை மீட்க தலைமுறை காக்க” என்ற பெயரிலான அந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல்லுக்கு வந்தார் அன்புமணி.
குடகனாறு அணையை ஆக்கிரமிப்பு பிடியிலிருந்து நீக்க வேண்டுமென கோஷமிட்டு நடை பயணத்தை துவக்கினார். பா.ம.க.வினர் ராமதாஸ் அணி ,அன்புமணி அணி என இரு பிரிவாக இருப்பதால் அவர் வரவேற்பில் பல இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அன்புமணி ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தை பார்வையிடுவதற்காக சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளித்த ராமதாஸ் ஆதரவாளர்கள் திடீரென, “ஒன்றிணைய வேண்டும்….ஒன்றிணைய வேண்டும்… ராமதாஸும் – அன்புமணியும் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க வேண்டும்” என கோஷமிட்டனர்.
அவர்கள் பாமக கொடி பிடித்துக் கொண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதாக பா.ம.கட்சியினர் தெரிவித்தனர்.
அன்புமணியின் தீவிர ஆதரவாளரும் மாவட்ட செயலாளராக அறிமுகப்படுத்தப்பட்ட திருப்பதி அந்த நேரத்தில் பாமகவினரிடம் அமைதியா இருங்க என்ற அறிவுறுத்தினார். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த அன்புமணி டென்ஷன் ஆனதாக தெரிகிறது.
அன்புமணியின் தீவிர ஆதரவாளரான பா.ம.க.பொருளாளர் திலகபாமா ராமதாஸ் அணியினர், கோஷம் போடாமல் தடுக்க தனது ஆதரவாளர்களை அன்புமணியின் அருகிலே இருக்குமாறும், ராமதாஸ் ஆதரவாளர்களை அவர் அருகில் நெருங்க கூடாது எனவும் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து கோஷமிட்டன் நிர்வாக குழு உறுப்பினர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.
“ராமதாஸும் அன்புமணியும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். தேர்தல் வரும் நேரத்தில் இருவரும் சண்டையிடுவது கட்சிக்கு நல்லதல்ல. அன்புமணி முன்கூட்டியே கட்சியை கைப்பற்ற திட்டமிட்டு வேலை செய்துள்ளார்.
யாரையும் கேட்காமல் பனையூரில் தனி அலுவலகம் துவங்கினார். தேர்தல் கமிஷனில் தன்னை முன்னிலைப்படுத்தி ஆவணங்களை தந்து உள்ளார்.
ராமதாஸ், அன்புமணிக்கு கட்சி பதவி கொடுக்க முதலில் மறுத்தார். பின்பு கட்சிக்காரர்கள் அனைவரும் சொல்லித்தான் அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. தலைவர் பதவி கொடுத்ததில் இருந்து தொண்டர்களுடைய கருத்துக்களை அவர் காது கொடுத்து கேட்பதில்லை.
தனது மனைவியை முன்னிலைப்படுத்துவதில் தான் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். இதனால் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர்.
அன்புமணி கட்சியை கைப்பற்றுவதற்கு திட்டமிடுவது தெரியாமல், எதார்த்தவாதியாக இருந்து விட்டார் ராமதாஸ். அன்புமணி திட்டமிட்டு காய்களை நகர்த்தி உள்ளார். தற்போது பிரிந்து சென்றவர்கள் ராமதாசுடன் இணைந்துள்ளனர்.
ஆகவே இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது. வரும் தேர்தலுக்குள் இது நடந்தால் தான் கட்சி வெற்றி பெறும். ராமதாஸ் எப்போதும் தொண்டர்களின் குரல்களை கேட்பார். ஆனால் அன்புமணி தொண்டர்களின் குரலை உதாசீனப்படுத்துவார். தற்போது இறங்கி வந்து தொண்டர்களின் குரல்களை கேட்கிறார். இதை முதலில் செய்திருந்தால் நாங்கள் பாராட்டி இருப்போம்.
மேலும் கட்சிக்குள் கோஷ்டி பூசலை வளர்க்கும், தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கும் திலகபாமாவுக்கு அன்புமணி முக்கியத்துவம் தருவது ஆபத்தானது. ராமதாஸ் போல் ,அன்புமணி போல் தன்னையும் ஒரு கோஷ்டியினர் வரவேற்க வேண்டுமென ஆசைப்படுபவர் திலகபாமா. இவரைக் கட்சியில் வைத்திருக்கும் வரை பாமகவுக்கு ஆபத்து என்பதை விரைவில் அன்புமணி உணர்வார். ராமதாஸும், அன்புமணியும் ஒன்றிணைந்தால் பாமகவுக்கு நல்லது, தமிழகத்துக்கு வல்லது” என்றார் ஆவேசமாக.
