கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் ஆணையர் உத்திரவின் பேரில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்த பல்வேறு CCTV கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டதில் இருந்து இரண்டு நபர்கள் தங்களது அடையாளத்தை மறைக்கும் விதத்தில் கருப்பு மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து இரு சக்கர வாகனங்களை திருடி உள்ளதும், திருடப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளதும் தெரிய வந்தது.

தனிப்படையினர் கேமரா பதிவுகளில் அடையாளங்களை வைத்தும், குற்ற சம்பவ இடங்களுக்கு அருகில் குற்றவாளிகள் பயன்படுத்திய கைபேசி எண்களை வைத்தும் குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் உக்கடம் GM நகரைச் சேர்ந்த சபில் மற்றும் சம்வர்தன் ஆகியோர் என தெரிய வந்தது.
அவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் சபில் மற்றும் சம்வர்தன் ஆகிய இருவர் சரவணம்பட்டி சத்தி சாலையில், கீரணத்தம் பிரிவில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது போலீசாரின் வாகனத்தை கண்டு தப்பிப்பதற்காக அதிவேகமாக வாகனத்தை ஒட்டி விபத்தாகி கால்கள் உடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சபில் மற்றும் சம்வர்தன் ஆகியோரை கைது செய்தும் விசாரணை மேற்கொண்டதில், ஒவ்வொரு சம்பவத்திலும் அவர்கள் போலீசாரை திசை திருப்புவதற்காக ரயில்வே டிராக் வழியாக நடந்து வருகின்றனர்.
பல்வேறு தேதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி பாப்பநாயக்கன்பாளையம், R.S புரம், பீளமேடு, சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் வைத்து பெண்களிடம் இருந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு உள்ளதும், பறித்த தங்க செயின்களில் ஒரு பகுதியை விற்று பணமாக்கிய இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து உள்ளதும் தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்தும் எதிரிகளிடம் இருந்து இரு சக்கர வாகனங்களையும் தங்கச் செயின்களையும் கைப்பற்றி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.