விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் வசித்து வரும் மருதுபாண்டியின் மனைவி பூங்கொடி.இவர் நரிக்குடியில் கடந்த மே 1 தேதி இரவு நரிக்குடி வாரச்சந்தையில் காய்கறி வாங்குவதற்கு சென்றுள்ளார்.

அப்போது அழகிய மீனாள் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு மர்ம நபர்கள் பூங்கொடியை நோட்டமிட்ட நிலையில் திடீரென நடந்து சென்று கொண்டிருந்த பூங்கொடியின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 பவுன் தங்க தாலிச்செயினை பறித்து விட்டு வாகனத்தில் ஏறி தப்பிச்செல்ல முயன்றனர்.
அப்போது பூங்கொடி நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் சுதாரித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்ப முயன்ற திருடனின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி தனது தாலி செயினை பத்திரமாக மீட்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு திருடன் இதனை கண்டதும் அங்கிருந்து தப்பி சென்றார்.
பூங்கொடியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் பிடிபட்ட அந்த நபர் இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை சேர்ந்த மூக்காண்டி மகன் பருத்திவீரன் (எ) சேதுபதி(38) என்பதும் இவர் மீது ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் நரிக்குடி போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் இதில் தலை மறைவாக இருந்த பருத்திவீரன் (எ) சேதுபதியின் கூட்டாளி கடலாடியை பிரபாகரன்(35) என்பவரை நரிக்குடி போலீசார் நேற்று கைது செய்தனர்.