• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சொன்னீங்களே… ஸ்டாலின் சார், செஞ்சீங்களா? திருச்சியில் தெறிக்கவிட்ட விஜய்! முழு பேச்சு!

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 13) தனது பரப்புரைப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார்.

மக்கள் கடலெனக் கூடியதால் விஜயின் பிரச்சார வாகனம், ஊர்ந்தபடியே வந்தது. இதனால் பரப்புரையில் பேசும் பாயின்ட்டான திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய்யின் வாகனம் வருவதற்கு மணிக்கணக்கில் தாமதமானது.

வாகனத்தில் இருந்தபடியே பேச்சைத் தொடங்கினார் விஜய்.

”அந்தக் காலத்தில் போருக்குப் போவதற்கு முன்பு போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவார்கள்.அதுபோல 2026 ஜனநாயகப் போருக்கு தயாராவற்கு முன்பு மக்களை சந்திக்க வந்துளேன்.

உங்க விஜய் நான் வர்றேன்னு நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்.

உங்கள் சார்பாக நம்மை மேலேயும் கீழேயும் மிக மோசமாக ஆண்டுகொண்டிருக்கும் ஃபாசிச பா.ஜ.க.வையும் பாய்சன் தி.மு.க.வையும் கேள்வி கேட்க வந்துள்ளேன்.

இது இந்த ஒற்றைத் தமிழ்மகன் குரல் இல்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்குரல். மக்களை வாட்டி வதைக்கும் பா.ஜ.க.வையும் தி.மு.க.வையும் விடவே விட மாட்டோம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம். இதன் மூலம் தேர்தல் தில்லுமுல்லுதான் நடக்கும்.அதற்காகத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதை கொண்டு வருகிறது.

பார்லிமெண்ட் தொகுதிகள் மறுசீராய்விலும் தென்னிந்தியாவிற்கு எதிராக மிகப்பெரிய சதி உள்ளது. இதை தமிழக வெற்றிக்கழகம் ஏற்காது. எப்போதும் எதிர்க்கும்.

தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல் சதி செய்கிறது. நமது இருமொழிக்கொள்கைக்கு எதிராக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்காக மிரட்டிப் பார்க்கிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கீழடி ஆய்வு முடிவுகளை மாற்றச் சொல்லி நெருக்கடி கொடுத்து, தமிழையும் தமிழர் நாகரிகத்தையும் ஒன்றிய பா.ஜ.க அரசு அழிக்கப் பார்க்கிறது. இதை தமிழகம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.

மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பதுபோல தமிழ்நாட்டுக்குப் பேரிடர் காலங்களில்கூட ஒழுங்காக நிதி ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கின்றது

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு தமிழக மீனவர்கள் அழிக்கப்படுவதை ஒன்றிய வேடிக்கை பார்க்கிறது.

நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு நேரும் துன்பங்களை கல்நெஞ்சத்துடன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

இது எல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு சொய்யும் ஓரவஞ்சனைகளில் சில சாம்பிள்கள்தான்.

*இப்படி ஒன்றிய பா.ஜ.க.வின் மோடி அரசு நம்மை வஞ்சிக்கிறது என்றால் இங்கிருக்கும் தி.மு.க. அரசு நம்மை நம்ப வைத்து ஏமாற்றுகிறது.

505 தேர்தல் வாக்குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகளை நிறைவேற்றாமலே நிறைவேற்றிவிட்டதாக மனசாட்சி இல்லாமல் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

முதல்வர் ஸ்டாலின் சார் விட்ட ரீல்கள் எல்லாம் பாதியிலேயே அறுந்துபோய்விட்டது. அப்படி அறுந்துபோன ரீல்களைப் பற்றி சொல்லட்டுமா?.

கேஸ் சிலிண்டருக்கு மானியமா 100 ரூபா தர்றேன்னு சொன்னீங்களே…
செஞ்சீங்களா?…

ஆயிரம் ரூபாய ஒருத்தர்விடாம எல்லா பெண்களுக்கும் தருவேன்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

டீசல் விலையில மீதி இருக்க மூன்று ரூபாய குறைப்பேன்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

நீட் தேர்வ ரத்து செய்வோம்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?…

கல்விக்கடன ரத்து செய்வோம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

கல்விய பொதுப்பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

வருசத்துக்கு பத்துலட்சம் பட்டதாரிகளுக்கு வேலை தருவேன்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

மின்சாரக் கட்டணத்த மாசாமாசம் கட்டுற மாதிரி மாத்துவேன்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…


மீனவர்கள பழங்குடியின பட்டியலில் சேர்ப்போம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

மீனவர்களுக்கு 2லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் உலர்த்தும் தளம் அமைக்கப்படும்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கத்துல் கொடுக்கற கடனுக்கு வட்டி 12 பர்சண்ட்ல இருந்து 8 பர்சண்ட்டா குறைக்கப்படும்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…
ஆட்டோ ஓட்டுறவங்களுக்கு சொந்த ஆட்டோ வாங்க 10 ஆயிரம் மானியம் வழங்கவோம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?….

சலவைத் தொழிலாளர்களுக்கு தொழிற்கருவிகள மானிய விலையில வாங்க ஆவண செய்வோம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஓல்டு பென்ஷன் ஸ்கீம் கொண்டுவருவேன்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிர்ந்தரம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசுப் பணி உறுதின்னு சொன்னீங்களே…  செஞ்சீங்களா?…
முதியோர் உதவித்தொகை 1500ரூபா தருவேன்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

தமிழகத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகள்ல 75%  தமிழர்களுக்கேன்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

3லட்சத்துக்கும் மேல இருக்க காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

தூய்மைப் பணியாளர்கள் பணி,ஊதியம்,ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்னு சொன்னீங்களே செஞ்சீங்களா?…

மக்கள் நலப் பணியாளர்களாக 25 ஆயிரம் பெண்கள் நியமிக்கப்படுவார்கள்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

ரேஷன் கடையில மீண்டும் உளுந்து வழங்கப்படும்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்களுக்கு 40% முன்னுரிமை அளிக்கப்படும்னு சொன்னீங்களே….செஞ்சீங்களா?….

கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத,ஆதரவற்ற பெண்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…



வக்ஃப் வாரியத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

அரசு வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரிய வீடுகளில் மாற்றுத் திறனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்படும்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

இலங்கைத் தமிழர்களக் காப்பாத்த ஒரே தீர்வு பொது வாக்கெடுப்புதான்…
அத நடத்த வலியுறுத்துவோம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்வது துரோகம் என்றால்
ஸ்டாலின் சார் கவர்மெண்ட் நம் மக்களுக்கு செய்வது நம்பிக்கை மோசடி.
இரண்டுமே தப்புதான். இரண்டுமே ஏமாற்று வேலைதான். இரண்டுமே ஜனநாயகக் குற்றம்தான். இவர்கள் இரண்டுபேருமே ஏமாற்றுவதில்
ஒரே வகையறாதான்.

முன்பெல்லாம் ஒன்றிய பிரதமர்.இப்போதெல்லாம் இந்திய பிரதமர்.
எப்டி வேணும்னாலும் பிளேட்டை மாற்றுவதில் முதல்வர் சாமர்த்தியசாலி.
இவர்கள் இரண்டு பேரையும் மறைமுக உறவுக்காரர்கள் என்று ஏன் சொல்கிறோம் என்பது இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், துறையூர், முசிறி, லால்குடி என  மொத்தம் ஒன்பது தொகுதிகள் இருக்கின்றன.

இங்கு தீர்க்கப்படாத பிரச்ச்னைகள் என்னவெல்லாம் இருக்கின்றன எனத் தெரிந்துகொண்டுதான் வந்திருக்கிறேன்.

நகரமும் கிராமமும் இணைந்த பகுதிகளைக் கொண்டதுதான் இந்த திருச்சி மாவட்டம்.

பெரிய பெருமைக்குரிய திருச்சி மாவட்டத்தில் காலகாலமா தீர்க்கப்படாத பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றன.அதில் சில சாம்பிள்களை மட்டும் சொல்கிறேன்.

திருச்சி என்றால் காவிரி ஞாபகம் வருவதுபோல காவிரி நீர் பிரச்சனையும் ஞாபகம் வரத்தான் செய்கிறது.

காவிரி நீர் மட்டுமா பிரச்சனையாக இருக்கிறது?. மணப்பாறை,வையம்பட்டி,
தொட்டியம் பகுதியில எல்லாம் குடிநீரே பெரிய பிரச்சனையாக  இருக்கிறது.இதை தீர்ப்பதற்கு இந்த தி.மு.க கவர்மெண்ட் செய்தது என்னவென்றால் ஜீரோதான்.

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டார்கள். ஆனால் மணல் அள்ளி விறபதில் மட்டும் நன்றாக காசு காசு பார்ப்பார்கள். யார் எப்படி போனாலும் அவர்களுக்கு காசுதான் முக்கியம்.

சிறுகனூர் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் இருக்கும் பகுதிகளில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் கெட்டுப் போகிறது. மக்கள் எவ்வளவோ புகார் கொடுத்தும்  ஒரு பயனுமில்லை.

மணல் மாஃபியா கூட்டம் தமிழ்நாடு முழுக்க இருக்கிறது. இதில் பெரும்பங்கு தி.மு.க ஆட்களுக்கு இருக்கிறது எனதற்கு துறையூரைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி செம்மண் விவகாரத்தில் கைதானதே மோசடி நடப்பதற்கான ஆதாரம்தானே?.

இவை எல்லாவற்றையும்விட இந்த மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தது எல்லோருக்கும் தெரியும். அது நடப்பதே தி.மு.க. எம்.எல்.ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில்தான்.ஆனால் அது திருட்டு இல்லை  முறைகேடு என்று வியாக்கியானம் பேசுகின்றனர்.

இந்த மாவட்டத்தில் இரண்டு மந்திரிகள் இருந்தும் இந்த மாவட்டத்துக்கு எதாவது பிரயோஜனம் இருக்கிறதா? இவங்களுக்கு வருகிற தேர்தலில் ஓட்டுப் போடுவீர்களா?….
(மக்கள் போடமாட்டோம் என்று குரல் கொடுக்கின்றனர்.)

ஆயிரம் ரூபாயை நீங்களே நமது பெண்களுக்கு தருவீர்கள். அதையும் எல்லாருக்கும் தர மாட்டீர்கள். ஆனால், ஆயிரம் ரூபாய் வாங்குறியே என்று ஒவ்வொருத்தரையும் நீங்களே அசிங்கப்படுத்துவீர்கள்.

*இலவச பஸ் விட்டுவிட்டு ஓசியில போறீங்கன்னு பெண்களை அவமானப்படுத்துவீர்கள்.
இப்படி அசிங்கப்படுத்துவதற்கு நீங்கள் கொடுக்காமலே இருந்திருக்கலாமே?

*இதுக்கு எல்லாம் மக்கள் பதில் சொல்லமாட்டார்கள் என்ற நினைப்பில் இருக்கும் தி.மு.க.விற்கு மக்கள் வருகிற தேர்தலில் தக்க பதிலடியை கொடுக்கப் போகின்றனர்.
(கொடுப்பீர்கள்தானே? என்று விஜய் கேட்க,கொடுப்போம் என்று மக்கள் பதில் அளிக்கின்றனர்)

*இந்த பதிலடியை கொடுக்க வைப்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் வேலை.
எதோ ஆறுதலையும் தேறுதலையும் மட்டும் சொல்லிட்டு
எல்லா விஷயத்திலும் குடும்ப சுயநலத்துலயும் கொள்ளை அடிப்பதிலேயும்
தி.மு.க. மாதிரி மக்களை ஏமாற்றுகிற வேலையை நாங்கள் செய்யவே போவதில்லை.

*தீர்வ நோக்கி போவதும் தீர்வு காண்பதும் மட்டும்தான் டி.வி.கே.வின் லட்சியம்.

*நம்முடைய தேர்தல் அறிக்கையில் எல்லாவற்றையும் தெளிவா விளக்கமா சொல்லுவோம்.

*அதை செய்வோம் இதை செய்வோம் என்ற பொய்யான வாக்குறுதிகளை எந்றைக்கும் தரமாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ எது உண்மையோ
அதை மட்டும்தான் சொல்லுவோம்.
ஆனால் கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், அடிப்படை சாலை வசதி,மின்சாரம் என்று அடிப்படைத் தேவைகளை சமரசமே இல்லாமல் நிறைவேற்றுவோம்…

*பெண்கள் பாதுகாப்பில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் சமரசமே கிடையாது.

*ஏழ்மை,வறுமை இல்லாத தமிழகம். குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம்.
ஊழல் இல்லாத தமிழகம். உண்மையான மக்களாட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி என அந்த தீர்வை நோக்கிச் செல்வதுதான் நமது லட்சியம். அந்த லட்சியத்தை அடைவோம் அடைவோம் அடைந்தே தீருவோம்.

நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். நன்றி வணக்கம்” என பேச்சை நிறைவு செய்தார் விஜய்.