• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஈரோடு இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை… தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!

ByP.Kavitha Kumar

Jan 17, 2025

“ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளராக சீதாலட்சுமி களம் காண்கிறனர்.

இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கட்சித் தலைவர் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.