தெற்கத்தி ட்விஸ்ட்!
திமுக, அதிமுக கட்சிகள் இடையே நிலவும் உட்கட்சி மோதலை மீறி ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர்கள் யார் என்பது தற்போது கவனம் பெற்றுள்ளது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது
நான்கு சட்டமன்ற தொகுதிகள் இருந்தாலும் அதில் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது தான் தற்போது மக்களிடையே கவனம் பெற்று வருகிறது.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறப்பு ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உள்ளது.
இதனால் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியை கைப்பற்ற திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது
திமுக சார்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட மகாராஜன் வெற்றி பெற்றார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன், திமுக வேட்பாளர் மகாராஜன், மற்றும் அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் திமுக வேட்பாளர் மகாராஜன், அதிமுக வேட்பாளர் லோகிராஜன் இருவரும் உடன்பிறந்த சகோதரர் ஆவார்கள்,
தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் மகாராஜன் 93541 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் லோகிராஜன் 85003 வாக்குகளும் பெற்றனர். இதில் திமுக வேட்பாளர் மகாராஜன் 8,538 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் 11, 896 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஆக இங்கே அதிமுகவும், அமமுகவும் ஒன்ற் சேர்ந்தால் திமுகவை வீழ்த்திவிட முடியும் என்று கணக்கு போடுகிறார்கள் அதிமுகவினர்.
மகாராஜன் இந்த முறையும் திமுக சார்பில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட தனக்கே சீட்டு வழங்கப்படும் என நம்பிக்கையில் உள்ளார்.
ஆனால் இவருக்கும் அமமுக வில் இருந்து திமுகவிற்கு வந்து எம்.பி.யான தங்க தமிழ்ச்செல்வன் இடையே பனிப்போர் நிலவி வருவதால் ஆண்டிப்பட்டி தொகுதிக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்வில் மேடையிலேயே தங்க தமிழ்ச்செல்வனும், மகராஜனும் முட்டாப் பயலே… ராஸ்கல் என்று பகிரங்கமாக திட்டிக் கொண்டது. இது தலைமை வரை சென்று பஞ்சாயத்து ஆனது.
தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இருந்தபோது மூன்று முறை ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
இதனால் இம்முறை மகாராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் தங்க தமிழ்செல்வனின் ஒத்துழைப்பு இருக்காது,. மேலும் எதிராக வேலை செய்யும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. எனவே மகராஜன் வெற்றி பெறுவது கடினம் தான் என திமுகவிலேயே பேசப்பட்டு வருகிறது.
அதிமுக சார்பில் கடந்த முறை ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட லோகிராஜன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த முறை மீண்டும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகிறார். அதேபோல் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள முறுக்கோடை ராமர் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக சார்பில்… ஆண்டிப்பட்டி தொகுதியில் கூட்டணி சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட வேண்டும் என அமமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கூட்டணி சார்பில் டிடிவி தினகரன் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக அதிமுக இடையே மட்டும்தான் போட்டி என்பது இதுவரை நடந்த சட்டமன்ற தொகுதிகளில் வரலாறாக இருக்கின்றது
எனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவிப்பது திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைமைகளுக்கு சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆண்டிபட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.
ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தொகுதியில் தினகரன் போட்டியிட்டு வென்றால்… அதிமுகவின் தலைமைக்கு அவர் மீண்டும் அச்சுறுத்தலாக இருப்பாரோ என்ற எண்ணமும் எடப்பாடிக்கு இருக்கலாம்.
ஆனால் இப்போதே ஆண்டிபட்டியில் தினகரன் வேட்பாளர் என்ற பேச்சுகள் ஆரம்பித்துவிட்டன.
