புதுச்சேரி மாநிலம் மூர்த்தி குப்பத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள மூர்த்தி குப்பத்தில் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஜதராபாத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை நிலையத்தில் இருந்து காலை 9.45 க்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் மூர்த்தி குப்பம் மீனவ கிராமத்தில் திரண்டு, அங்கிருந்த மக்களை அறிவுறுத்தி உடனடியாக அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தார்கள். மேலும் படகுகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட நேரத்தில் சுனாமி பேரலைகள் தாக்கியதாக அறிவிக்கப்பட்ட பின்பு, ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, சிகிச்சையளிப்பது உள்ளிட்டவைகள் தத்துரூபமாக செய்து காட்டப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் அதிகாரிகள் எப்படி துரிதமாக செயல்படுகின்றார்கள் என்பதை அரசு அதிகாரிகள் பதிவு செய்தனர். மேலும் இந்த பதட்டமான அறிவிப்புகள் ஒத்திகை என அரசு அதிகாரிகள் அறிவித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தினர்.