புதுக்கோட்டையில் நாளை காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்தத் தேர்வு மையங்களை இன்று மாலை திருச்சி ஐஜி கபில் சரத் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் நாளை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு தேர்வு நடைபெறுகிறது. காலை தொடங்கி மாலை வரை நடைபெறும் இந்த தேர்வானது தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி என்று சொல்லப்படும் ராஜா கல்லூரியில் 624 பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதேபோல் ஜேஜே கலை அறிவியல் கல்லூரியில் 1157 பேரும் மவுன்சியான் பொறியியல் கல்லூரியில் 1800 பேரும் என ஆக மொத்தம் 3581 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
அவர்களை கண்காணிப்பதற்காக நாளை இந்த மூன்று மையங்களிலும் 510 போலீசார் காவல் பணியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த மையங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய திருச்சி ஐஜி கபில் சரத் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை ராஜா கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட போது அவருடன் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உடன் இருந்தார். மேலும் இந்த ஆய்வின் போது இங்கு வந்து தேர்வு எழுத வரும் தேர்வர்களுக்கு போதிய அளவுக்கு உணவு குடிதண்ணீர் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் ஐஜி கபில் சரத் கேட்டறிந்தார். இதேபோல் மூன்று மையங்களையும் ஆய்வு செய்து சென்றார்.




