
2011-16 ம் கால அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற பணி நியமன முறைகேடுகளில் சிக்கி பல கட்ட சட்ட போராட்டங்கள் வாயிலாக, அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அமைச்சரின் கைதை தொடர்ந்து அவரின் பணபரிமாற்றத்தை கையாண்ட பினாமிகள் கைது பயத்தில் உள்ளனர். இது குறித்து நம்மிடம் பேசிய கப்பல் மாலுமிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நலச்சங்க தலைவர் செந்தில்குமார் “2011-16 ம் கால அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி செய்த முறைகேடுகளை விட தற்போதைய திமுக ஆட்சியில் அவர் செய்து வரும் முறைகேடுகள் ஏராளம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மின்சாரத்துறையில் நடக்கும் நிலக்கரி இறக்குமதி சம்மந்தப்பட்ட குளறுபடிகளை கூறலாம்.

செந்தில்குமார்
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை ஒரிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவருவதற்காக வாடகைக்கு கப்பல்களை ஒப்பந்தம் செய்யவும், நிலக்கரி இருப்பை உறுதிப்படுத்தி, மின் உற்பத்தி தடைபடாமல் இருக்க உதவுவதற்காகவும் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது 1974 ம் ஆண்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் துவங்கப்பட்டது.
ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் கப்பல்துறையில் அனுபவம் பெற்ற மெரைன் இன்ஜினியர் மேற்பார்வையில் கப்பல்கள் இயக்கப்பட்டு வந்தன. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் மாதம் தோறும் ஒரு பெரும் தொகையை சேவை கட்டணமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வழங்கியது.
பின்னர் 2020 ம் ஆண்டு செலவுகளை குறைக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் கப்பல் பிரிவு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கப்பல்களை ஒப்பந்தம் செய்துவருகிறது. ஆண்டுதோறும் 2000 கோடி பரிவர்த்தனையை மேற்கொள்ளும் கப்பல் பிரிவிற்கு கப்பல்துறையில் அனுபவமுள்ள மெரைன் இன்ஜினியரை பணியில் அமர்த்தாமல் துறை அனுபவமற்ற இளம் எலக்ட்ரிகல் இன்ஜினியர்களை பணியாளர்களாக பெயரளவில் நியமித்து விட்டு, அமைச்சரின் உதவியாளரே நேரடியாக கப்பல்களை ஒப்பந்தம் செய்து வருவதும், இதற்காக பெருமளவில் லஞ்சம் பெறுவதும் நடந்து வருகிறது.
செந்தில் பாலாஜியின் உதவியாளரான சுரேன் கட்டுப்பாட்டில் இயங்கும் கப்பல் பிரிவை சுரேனுக்கு நெருக்கமான மதுரையை சார்ந்த மதன் என்பவர் நிர்வகித்து வருகிறார். அதிகாரிகளை மிரட்டி பணிய வைக்கும் மதன் மூலம் செந்தில் பாலாஜியின் கருப்பு பணம் ஐக்கிய அரபு நாட்டில் ராசல் கைமா நகரில் உள்ள அல் கலீஜியா அக்ரிகேட்ஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அல் கலீஜியா அக்ரிகேட்ஸ் என்ற நிறுவனம் கட்டடங்களுக்கு தேவையான மூலப்பொருட்களையும், சுண்ணாம்புக்கல் உள்ளிட்டவற்றையும் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக பல கப்பல்கள் உள்ளன. அவற்றில் சில கப்பல்களை சட்டத்திற்கு புறம்பாக மின் வாரியம் வாடகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அல் கலீஜியா நிறுவனத்தின் கப்பலை ஒப்பந்தம் செய்வது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் அந்த நிறுவனத்திற்கு கப்பல் வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கினார் அமைச்சரின் உதவியாளர் சுரேன்.
இது சம்பந்தமாக பலமுறை புகார் தெரிவித்தும் கூட அமைச்சர் கண்டுகொள்ளவில்லை. மின் வாரியத்தில் நடக்கும் நிலக்கரி ஊழலை தடுக்க கப்பல் பிரிவிற்கு உரிய கப்பல் அனுபவமுள்ள அதிகாரிகளை நியமித்து நேர்மையான முறையில் நிர்வாகத்தை நடத்தினால் மின்சார உற்பத்திக்கான மூலப்பொருள் விலை குறைந்து, மின் உ ற்பத்தி செலவுகளும் குறையும். இதனால் மின் கட்டண உயர்வையும் தடுக்கலாம்” என்றார் ஆதங்கத்தோடு.

தமிழக முதல்வர் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
