பெரம்பலூர் மாவட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரிய பெண்மணி மேற்கு ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரகப் பகுதிகளில் அரசு உதவிபெறும் நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிகழ்வை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (15.07.2024) தொடங்கி வைத்தார்கள்.
அந்த நிகழ்ச்சியை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியவெண்மணியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான சிதம்பரம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரலையில் பார்வையிட்டு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
பின்னர் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது
இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாக, பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளின் பசியை போக்கும் திட்டமாக அமைந்திருப்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத்திட்டமாகும். ஏழை,எளிய மாணவ மாணவிகள் குடும்பச்சூழலால், பசியோடு பள்ளிக்கு வரும் நிலையை மாற்றி, தாயுள்ளத்தோடு மாணவர்களுக்கு கலை உணவளிக்கும் உன்னத திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதற்கட்டமாக நகரப்பகுதிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 15.09.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவு படுத்தி 25.08.2023 அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து, உணவருந்தினார்கள்.
இந்தியாவிற்கே யுன்னோடியான திட்டமாக திகழும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பொதுமக்களிடத்திலும், மாணவ மாணவிகளிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கும் இந்த திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவுபடுத்தியுள்ளார்கள்.
இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 263 அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்மூலம் 11,948 மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுதுதவரை முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்த தொடங்குவதற்கு முன் 93.08 சதவீதமாக இருந்த மாணவர்கள் வருகை இத்திட்டம் செயல்படுத்த தொடங்கிய பிறகு 96.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இன்று ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட 5 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 286 மாணவ,மாணவிகளும், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட 5 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 240 மாணவ,மாணவிகளும், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட 17 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1,554 மாணவ,மாணவிகளும் வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட 18 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1,211 மாணவ,மாணவிகளின் என மொத்தம் 45 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 3,291 மாணவ,மாணவிகள் பயன்பெற உள்ளார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்க தேவையான உணவு பொருட்கள் ( அரிசி, பருப்பு, எண்ணெய், உப்பு, ரவை, கோதுமை ரவை மற்றும் சேமியா) காய்கறிகள், பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளிட்ட பொருட்கள் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிப்பதற்கு தேவையான சமையல் கூடம், குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவ,மாணவிகள் உணவு உட்கொள்வதற்கு ஏதுவாக புதிதாக தட்டு மற்றும் டம்ளர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் மனம் அறிந்து, நிலை உணர்ந்து, மாணவ மாணவிகளின் உயர்வுக்காக, மகளிர் நலனுக்காக எண்ணிலடங்கா திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும், கிராமப்பகுதிகளில் வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.5.46 லட்சம் மதிப்பில் வீடுகளை பழுதுபார்ப்பதற்கான ஆணைகளையும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ்14 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும், மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிதம்பரம் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, காலணிகள், கால்உறைகள், வண்ண பென்சில்கள், கணித உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களையும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில், மகளிர் திட்ட இயக்குநர் அமுதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ம. முத்துலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்( பொறுப்பு )அண்ணாதுரை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் மரு.கருணாநிதி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பூங்கொடி, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
