• Thu. May 2nd, 2024

சோழவந்தானில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டும்… ரயில் பயணிகள் கோரிக்கை..,

ByN.Ravi

Mar 11, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் பயணிகள் நல சங்கத்தின் கூட்டம் இங்குள்ள கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வக்கீல் ராஜேந்திரன், முனியம்மாள், புவனா பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரவணன் வரவேற்றார். கூட்டத்தில், செயலாளர் அய்யனார் தீர்மானங்களை வாசித்தார். சோழவந்தான், விக்கிரமங்கலம்மற்றும் இதனைச்
சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் கலந்து கொண்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காஜாமைதீன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், பேசிய நிர்வாகிகள், சோழவந்தான் ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது அன்று முதல் இந்த ரயில் நிலையத்தில் சோழவந்தானைச் சுற்றியுள்ள 50க்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் ,பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச்செல்லக் கூடியவர்கள் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு தினசரி சீசன் டிக்கெட் பயணம் சீட்டு மூலம் இப்பகுதி கிராம மக்கள்ரயிலில் சென்று பயனடைந்து வந்தனர். இந்த வழித்தடத்தில், அகல ரயில் பாதை ஏற்படுத்தியதற்குப் பிறகும், கொரோனா காலத்திலும் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று சென்ற ரயில்கள் 5க்கு மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால், இப்பகுதி கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து, சோழவந்தான் ரயில் பயணிகள் சங்கத்தினர் இப்பகுதியில் நடைபெற்ற ஊராட்சிகளில் தொடர்பு கொண்டு கிராம சபை கூட்டத்தில் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று சென்ற ரயில்கள் மீண்டும் நிறுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர்.
இதிலிருந்து, சோழவந்தான் அதைச் சுற்றியுள்ள பொதுமக்கள் ரயில் பயணிகள் நலச் சங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். இதனால், ரயில்வே
துறை அதிகாரிகள் தேனி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட அரசியல் பிரமுகர்களை சந்தித்து சோழவந்தானில் ரயில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மனுக்கள் கொடுத்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் ரயில்வே அதிகாரிகள் எடுக்கவில்லை இதனால், இப்பகுதி பொதுமக்கள் ஆதரவுடன் ரயில் பயணிகள் போராட்டம் செய்வதென்று முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, ரயில் பயணி மீனாட்சி கூறியதாவது: சோழவந்தானிலிருந்து மதுரைக்கு வேலைக்கு சென்று வருகின்றேன். இரவு மதுரை ரயில் நிலையத்தில் 8 மணி அளவில் தூத்துக்குடி மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், தினசரி வந்து கொண்டிருக்கிறோம். ஏற்கனவே, அந்த ரயிலில் எஞ்சின் அருகே இரண்டு பயணிகள் பொது பெட்டிகளும் ரயிலின் கடைசியில் இரண்டு பொதுபெட்டிகளும் இருந்து வந்தன.
தற்போது, பயணிகள் பொதுப்பெட்டியை எங்கு இணைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு இடத்தில் பயணிகள் பொது பெட்டி இணைக்கப்படுவதால், என் போன்ற பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். வேலைக்குச் சென்று களைப்பாக வருகின்ற நேரத்தில் ரயில் பெட்டியை தேடுவதில் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு ரயில் கிளம்பும் நேரத்தில் ஏதாவது ஒரு பெட்டியில் ஏறுவதால், அங்குள்ள ரயில் பரிசோதகற்கும் எங்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், மன வேதனை அடைகிறோம். மதுரையில் இருந்து சுமார் 20 அல்லது30 நிமிடத்தில் சோழவந்தானில் இறங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. சோழவந்தான் விவசாய பகுதி என்பதால் எங்களைப் போன்ற படித்த பெண்கள் மதுரையில் உள்ள பெரிய கடைகளுக்கு சென்று பணி செய்து வருகிறோம். வேலையை முடித்து ஊருக்கு வரும்பொழுது மிகவும் சிரமப்பட்டு ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
சில நேரங்களில், ரயிலை விட்டுவிட்டு அங்கிருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு சென்று சோழவந்தானுக்கு நாங்கள் பயணிக்க கூடிய அவல நிலை இருக்கிறது. இதனால், நேரமும் பண விரையம் ஆகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோழவந்தானில் அதிகமான சீசன் டிக்கெட் மற்றும் பயணிகள் சென்று வரக்கூடிய ரயிலில் பயணிகள் ரிசர்வேஷன் இல்லாத பொது பெட்டி நிரந்தரமாக ஏற்கனவே, இருந்தது போல் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கண்ணன் கூறும் போது, சோழவந்தான் ரயில் நிலையம் அதிக கிராம மக்கள் பயன்படுத்தக்கூடிய மிகப்பெரிய ரயில் நிலையம் ரயில் வசதியை குறைத்ததால் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.
குறிப்பாக ,இந்த ரயில் நிலையத்தை விக்கிரமங்கலம் மற்றும் செக்கானூரணி பகுதியை சேர்ந்த மக்கள் சோழவந்தான் ரயில்வே நிலையத்தை பெரிதும் விரும்புகின்றனர். ஏனென்றால், மதுரையில் இறங்கி கூட்ட நெருசலில் சிக்கி வெளியே வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறதாம். சோழவந்தானிலிருந்து அவர்கள் செல்லக்கூடிய கிராமங்களுக்கு செல்வதற்கு மிகவும் வசதியாக இருப்பதாக தெரிவித்தார். ஆகையால், ரயில் பயணிகளின் கோரிக்கை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உடனடியாக சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று சென்ற ரயில்களை மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ,
மைசூர் தூத்துக்குடி ரயிலில் பொதுப் பெட்டியை தினசரி ஒரே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *