• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Byவிஷா

Jun 10, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. நாகர்கோவில், மார்த்தாண்டம், மயிலாடி, கொட்டாரம், கன்னிமார், தக்கலை, இரணியல், ஆனைக்கிடங்கு, கோழிப்போர்விளை, குழித்துறை பகுதிகளில் சாரல் மழையாகவும், மிதமான மழையாகவும் விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில், பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டியது . இந்த வெள்ளம் அருவியின் அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளம், கல் மண்டபம் இவைகளை மூழ்கடித்தவாறு பாய்ந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையை அடுத்து நேற்று திற்பரப்புக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அருவியில் குளிக்க திடீர் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் தடுப்பு வேலிக்கு வெளிய நின்றவாறு வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்த்து ரசித்துவிட்டு சோகத்துடன் சென்றனர். அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் பாய்கிறது. குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் வெள்ளம் போல் பாய்கிறது. இதனையடுத்து கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.