• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!

Byவிஷா

Nov 1, 2023

இன்று நவம்பர் 1 கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த நாள். இந்த நாளை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம். “குமரியின் தந்தை” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மார்ஷல் ஏ.நேசமணி ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட, தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்த, தமிழகத்தின் பூர்வீகப் பகுதியான, பீருமேடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், நெய்யாற்றின்கரை, விளவங்கோடு, தேவிக்குளம் ஆகியவை இருந்தன. இப்பகுதி மக்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த போதும் சில ஆதிக்க சக்தியின் அடக்குமுறையால் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் அவதியுற்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்து வரும் பகுதியைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று விரும்பினர். இவர்களின் நிலையறிந்து தியாகி மார்ஷல் நேசமணி தலைமையில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதன் விளைவாக 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விளவங்கோடு, தோவாளை, கல்குளம், அகஸ்தீஸ்வரம் ஆகிய தாலுக்காக்கள், செங்கோட்டையில் பாதி தாலுக்கா தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. இதுவே இன்று தமிழகத்தின் எல்லையாக வரலாற்றில் சிறந்து விளங்குகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.