• Mon. Apr 29th, 2024

ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..

Byவிஷா

Jun 25, 2022

உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில வாரங்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக புலி, காட்டெருமை, கரடி மற்றும் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வரத் துவங்கி உள்ளன. இதனால் அடிக்கடி மனித – விலங்கு மோதல் ஏற்படும் சூழல் நிலவியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உதகை நகராட்சிக்குட்பட்ட மார்லிமந்து அணையை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் தாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினமும் நவநகர் பேலஸ் பகுதியில் கால்நடைகளை மர்ம விலங்குகள் வேட்டையாடியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மார்லிமந்து அணையில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, சில செந்நாய்கள் ஒரு புலியை துரத்தி செல்வதை பார்த்துள்ளனர். இதனை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட வனத்துறையினர் மார்லிமந்து அணைப் பகுதிக்கு சென்று அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். புலியின் கால் தடம் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களை மரங்களில் பொருத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *