• Fri. May 3rd, 2024

மார்ச் 21ஆம் தேதி திருவாரூர் ஆழித்தேரோட்டம்..!

Byவிஷா

Jan 3, 2024

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகக் கருதப்படும், திருவாரூர் ஆழித்தேரோட்டம், வருகிற மார்ச் 21ஆம் தேதியன்று நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவாரூர் ஆழித்தோரோட்டத்தைக் காண பல ஊர்களில் இருந்தும், கட்டுச்சோற்றுடன் வண்டி மாடு கட்டிக் கொண்டு, மக்கள் சாரை சாரையாக செல்வார்கள். அதெல்லாம் கடந்த தலைமுறையினரின் பாரம்பரிய, பண்டிகைத் திருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வந்தது. கால மாற்றத்தில், செல்போன், இன்ஸ்டாகிராம் யுகத்தில்… தேர் தானே என்று இன்றைய இளைஞர்கள் அதைப் புறந்தள்ளினாலும், இன்றும் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்று திருவாரூர் ஆழித்தேர் அழைக்கப்படுகிறது. இந்த தேர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஓடத் தொடங்கியது என வரலாறுகள் தெரிவிக்கின்றது.
இந்தத் தேரின் மொத்த உயரம் 96 அடியாகவும், அகலம் 67 அடியாகவும் உள்ளது. இதன் மொத்த எடை 350 டன் ஆகும். இந்த தேரினை இழுப்பதற்கு ஒன்றரை டன் எடையுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரமுடைய வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது. தேர் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தேரை திருப்புவதற்கும் தேரினை நிறுத்துவதற்கும் புளிய மரத்தாலான 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் தேரின் முகப்பு பகுதியில் ரிக், யஜுர், சாம, அதர்வண என்கிற நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு குதிரைகள் பாயும் நிலையில் அமைக்கப்பட்டு அழகாக காட்சி தரும். அவற்றின் நடுவில் யாழி ஒன்றும் அமைக்கப்படும். இந்த தேரைப் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, அவர்களுக்கு உதவும் வகையில் பின்பக்கத்தில் புல்டோஸர் இயந்திரம் மூலம் தேர் தள்ளப்படும்.
இந்த மிகப் பெரிய தேர் ஆடி அசைந்து வரும் காட்சியைக் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூர் வருவார்கள். அன்றைய தினம் திருவாரூரில் கேட்கும் ‘ஆரூரா தியாகேசா” என்ற முழக்கம் விண்ணை எட்டும் அளவுக்கு இருக்கும். ஆண்டுதோறும் ஆழித்தேர் திருவிழா பங்குனி உத்திரம் அன்று பத்திரிகை வாசித்து அதன் பின்னர் தேர் திருவிழாவுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இப்படி இந்த ஆண்டும் குறிப்பிட்ட நாளில் நடைபெறும் என்பது குறித்த தகவல் ஒன்று முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆழித்தேர் திருவிழா மார்ச் 21-ம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்தில் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்ட விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *