• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எஸ்.பி.வேலுமணி மீது இறுகும் பிடி..விசாரணை அறிக்கை தாக்கல் தமிழக அரசுக்கு உத்தரவு

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக டெண்டர் முறைகேட்டு விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி எதிராக நூறு சதவீதம் வலுவான ஆதாரங்கள் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கை காட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதேப்போன்று அறப்போர் இயக்கமும் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடர்ந்திருந்தது. இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டென்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு அதுதொடர்பான அனைத்து மனுக்களையும் முடித்து வைத்திருந்தது. இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 6ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கொள்கை ரீதியாக மட்டுமே தான் நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் அறப்போர் இயக்கம் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 7ம் தேதி நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், மேற்கண்ட விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘டெண்டர் முறைகேடு விவகாரத்தை பொருத்தமட்டில் எஸ்.பி.வேலுமணி பொய்யான தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு நூறு சதவீதம் வலுவான ஆதாரங்கள் உள்ளது. அதனால் தான் இதுதொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதில், எஸ்.பி.வேலுமணி மட்டுமில்லாமல் அவருடன் முறைகேட்டில் ஈடுபட்ட 16 பேர் மீது ஆதாரங்கள் உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு எந்தவித சலுகையும் வழங்காமல் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல்கட்ட விசாரணை அறிக்கையை 3 வாரத்தில் சமர்பிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.