விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் மூன்று கட்டங்களாக நடந்துள்ளன. மூன்று கட்ட அகழாய்விலும் சேர்த்து 12,930 பொருட்கள் கிடைத்துள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வில் மட்டும் 5,003 பொருட்கள் கிடைத்துள்ளன.

இதன் மூலம் தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வில் விஜயகரிசல்குளம் முதலிடம் வகிக்கிறது.நெல்லை, தூத்துக்குடி ,கடற்கரையில் கிடைத்த வலம்புரி, வெண் சங்கு, உள்ளிட்ட சங்குகளை சேகரித்து, அதனை இப்பகுதியில் சங்கு வளையல் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு அதனை வட மாநிலங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வுக்கு அடுத்தபடியாக விஜயகரிசல்குளம் அகழாய்வில் மட்டுமே ரோம் நகரை சேர்ந்த மோதிரக்கல் கிடைத்துள்ளது. குறிப்பிடத்தக்கது. இதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட சூது பவளமணி சங்கு வளையல்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்துள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வியாபாரத்திற்கு அதிக அளவு சுடுமண் முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட மதுரை, தஞ்சாவூர் ,செப்புக்காசுகள் செஞ்சி நாயக்கர் கால காசுகள், வேநாடு என அழைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த சேரா காசுகள் ஆகியவை வாணிகம் செய்ததன் மூலம், இப்பகுதியில் கிடைத்துள்ளது. அதுவும் ஒரே இடத்தில் பல்வேறு நாணயங்கள் கிடைத்தது சிறப்பம்சமாகும். ஒரு தங்க காசு, 19 செப்புநாணயங்களும், கிடைத்துள்ளன. மொத்த அகழாய்வில் 50% கண்ணாடி மணிகளும், 40% வளையல் துண்டுகளும் ,10 சதவீத சுடு மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும் கிடைத்துள்ளளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.