கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பல்கலைக் கழகத்தின் சான்றிதழை வழங்கி அம்மாநில இளைஞர் ஒருவர் அரசு பணிக்கு சேர்ந்துள்ளார். அந்தச் சான்றிதழின் உண்மை தன்மையை ஆராய்ந்த போது அது போலியானது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து சான்றிதழ் அளித்த நபர் மீது மலப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன்(40), வெங்கடேஷ்(24) அரவிந்த் குமார்(24), ஆகியோர் அதிக தொகையைப் பெற்றுக் கொண்டு போலியாக பல்வேறு பிரபலமான பல்கலைக்கழகங்களில் பெயர்களில் கல்வி சான்றிதழ்கள் போலியாக அச்சடித்து விநியோகம் செய்து வந்துள்ளது தெரிய வருகிறது.


இதனைத் தொடர்ந்து போலி சான்றிதழ் தயாரிப்பில் ஈடுபட்ட மூன்று பேர் மற்றும் அதற்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர் , பல்வேறு முக்கிய ஆவணங்களை கேரள போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸார் நடத்திய ரகசிய விசாரணையில், ஜெயினுலாபுதீன் ஒரு அமைப்பின் முக்கிய நிர்வாகியாக உள்ளார். கடந்த ஓராண்டாக ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து கிராபிக் டிசைனிங் என்ற பெயரில் போலியாக பல்கலைக்கழகங்களில் சான்றிதழ்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு உதவியாக வெங்கடேஷ், அரவிந்த் குமார் ஆகியோர் இருந்துள்ளனர். இதேபோல் வேறு மாநில பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களை போலியாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.




