• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை- காவல்துறையினர் விசாரணை

BySeenu

Apr 5, 2024

மாயமான கணவரைத் தேடி கோவை வந்த இடத்தில் உடமைகளும் திருடு போனதால் விரக்தி அடைந்த தாய், மகன், மகள் என மூவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(50). இவரது மனைவி வரலட்சுமி (45). இவர்களுக்கு (16) வயதில் ஒரு மகனும் (15) வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

சென்னையில் வசித்து வந்த விநாயகமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இது தொடர்பாக வரலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் தேடி வருகின்றனர். இருப்பினும் பல மாதங்களாக விநாயகமூர்த்தி குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால் மூவரும் விரக்தியில் இருந்து வந்தனர்.

இதையடுத்து சென்னையில் வசிக்க விரும்பாமல் வேலை தேடி கேரளா செல்வதற்காக ரயில் மூலம் கிளம்பி உள்ளனர். ரயில் கோவை போத்தனூருக்கு முன்பாக வரும்போது, அவர்களது உடைமைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோவை போத்தனூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடைமைகளும் இல்லாமல், உணவு வாங்குவதற்கு பணமும் இல்லாமல் மூவரும் கடுமையாக தவித்து வந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இதனால் கோவைக்கு எப்படியாவது சென்று விடலாம் என தண்டவாளத்திலேயே நடந்து, மூவரும் போத்தனூரில் இருந்து கோவை வந்துள்ளனர்.

நஞ்சுண்டாபுரம் அருகே வந்த போது கடும் பசி காரணமாக அங்குள்ள நிறுவனம் ஒன்றில் உணவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் வழங்கிய உணவை அருந்திவிட்டு மூவரும் இருப்புப் பாதை அருகே அமர்ந்திருந்தனர். நேற்று மாலை திடீரென ரயில் தண்டவாளத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்த மூவரும், அவ்வழியே வந்த பயணிகள் ரயில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த கோவை இருப்புப் பாதை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் மாயமானதால் மூவரும் தற்கொலை செய்து கொண்டார்களா, அல்லது கடன் தொல்லையால் இந்த முடிவை எடுத்தார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக இருப்புப் பாதை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் மற்றும் சிறுமி உட்பட மூவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.