

சரவணன் சுப்பையா சிட்டிசன் படத்திற்கு பின் 16 ஆண்டுகள் கழித்து இயக்கி இருக்கும் படம்மீண்டும்’ படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு ஆகியோர் முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் லியோனி பேசும்போது, ஒரு திரைப்படத்தின் வெளியீட்டு விழா, எல்லோருக்கும் பழக்கமான மேடை. இதில் ஆட் அவுட்டாக உட்கார்ந்திருப்பது நானும் நாஞ்சில் சம்பத்தும்தான். இது எனது 2-வது மேடை. முதல் மேடை போஸ் வெங்கட் இயக்கிய ‘கன்னி மாடம்’ படம்.
சரவணன் சுப்பையா இயக்கத்தில் வரும் இந்த ‘மீண்டும்’ பட விழா எனது இரண்டாவது மேடை. சினிமாவில் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது ‘கங்கா கவுரி’ படத்தில் நான் நடித்தபோது எனக்கு தெரிந்தது. முகத்துல வேதனையைக் காட்டணும் என்று இயக்குநர் சொன்னார்.
அந்த ஒரு காட்சியில் நான் நடிப்பதற்கு மூன்றரை மணி நேரம் ஆனது. அன்றைக்குத்தான் நான் சினிமாவை விட்டேன். அதற்கு பிறகு தற்போது ‘ஆலம்பனா’ படத்தில் நடித்திருக்கிறேன்.சரவணன் சுப்பையா இயக்கிய ‘சிட்டிசன்’ படத்தில் அஜீத்துக்கு அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சி வைத்திருப்பார்.
மாபெரும் உலக நடிகராக அந்த படம் அஜீத்தை மாற்றும் அளவுக்கு சரவணன் சுப்பையா அமைத்திருப்பார். அவருக்கு இப்படம் ‘சிட்டிசன்’ போல் மீண்டும் ஒரு வெற்றி படமாக அமையும்.இப்படத்தின் கதாநாயகனான கதிரவன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
அவருக்கு வாழ்த்துக்கள். குடும்ப கதையம்சம், வெளிநாட்டு தரத்துடன் இணைந்து படத்தை கொடுத்திருக்கிறார் சரவணன் சுப்பையா. இசையும் மிக அற்புதமாக தந்திருக்கிறார் இசை அமைப்பாளர். கலைப் படைப்பு நம் வாழ்க்கையில் ஒரு நிலையாவது மாற்ற வேண்டும். அதுதான் சிறந்த கலைப் படைப்பு. அது போன்ற படத்தை இயக்குனர் சரவணன் சுப்பையா மீண்டும், மீண்டும் தர வேண்டும். இப்படம் மக்கள் மீண்டும் பார்க்கும் வெற்றிப் படமாக அமையும் என்றார்.
