இளங்கோ சினி கிரியேஷன்ஸ் வழங்கும், இள பரத் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ‘தோற்றம்’. படத்தின் நாயகியாக வசுந்தராவும் முக்கியமான கதாபாத்திரத்தில் பருத்தி வீரன் சரவணனும் நடித்துள்ளனர்.
இப்படத்தினை ஏ. தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். சம்பத்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் . முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார். நல்லதம்பி இசையமைத்துள்ளார். B. இளங்கோவன் தயாரித்துள்ளார்.
‘தோற்றம்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் மோகன் ஜி கலந்து கொண்டு பேசும் போது..,
“நான் பொதுவாக எல்லா சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில்லை. ஆனால் என் மீது அன்பு கொண்டவர்கள், எனக்கு நன்மை செய்தவர்கள், உதவி செய்தவர்கள் சம்பந்தப்பட்ட விழாக்களில் நான் கலந்து கொள்வேன். இது எனது குடும்ப விழா போன்றது. பரத் ஒரு நாயகனாக இதில் அறிமுகமாகிறார்.அவரது அப்பா இளங்கோவன் எனக்கு நிறைய உதவிகள் செய்த வர் .நான் ‘திரௌபதி’ படம் எடுத்த போது ஒன்றுமே இல்லாமல் நின்றபோது அவர்கள் ஊரில் எனக்கு நிறைய உதவி இருக்கிறார். அதற்கு நன்றிக் கடனாகத்தான் இங்கே நான் வந்திருக்கிறேன். இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது எனக்கு ‘திரௌபதி’ படத்தின் நினைவு தான் வருகிறது. நாங்கள் எங்கெல்லாம் சென்று படம் எடுத்தோமோ அங்கெல்லாம் இவர்களும் போய் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். குறிப்பாக நான் ‘திரௌபதி’ படத்தில் பயன்படுத்திய அந்த திரையரங்கத்தின் உரிமையாளர் தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இளங்கோவன் அவர்கள்,

அவர் சினிமாவில் சம்பாதித்ததையே சினிமாவில் முதலீடு செய்துள்ளார். சம்பாதித்த பணத்தை மட்டுமல்ல, தனது மகனையும் முதலீடு செய்துள்ளார் .ஒரு நடிகராக நல்ல தகுதி உள்ள உடற்கட்டு உள்ள திறமையான நடிகராக தரமான நடிகராக தனது மகனை முதலீடு செய்துள்ளார்.நானே எதிர்பார்க்கவில்லை.
அவரும் மிகை நடிப்பு இல்லாமல் நன்றாகவே நடித்துள்ளார்.
இங்கே திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் நன்றாக இருந்தன.படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளரும் சின்ன பட்ஜெட்டில் எந்த அளவிற்குத் தரமான ஒளிப்பதிவைக்கொடுக்க முடியுமோ அந்த அளவிற்குக் கொடுத்துள்ளார் .
எனக்கு ‘திரௌபதி’ படம் எடுத்த நினைவு தான் இப்போது வருகிறது . அந்த ஒரு செண்டிமெண்டாக நான் சொல்கிறேன், அந்தப் படம் எடுத்த இடங்களில் எல்லாம் இவர்களும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அதேபோல இந்த படமும் வெற்றி பெற வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன்.
தன் நண்பன் பரத்தை வாழ்த்துவதற்காக அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறையில் இருந்தெல்லாம் வந்திருக்கும் நண்பர்களுக்கு எனது நன்றி.
இன்றைக்குப் படம் எடுப்பது சுலபம் .அதை வெளியிடுவதற்கான போராட்டம் மிகப்பெரியது. அதன் நடைமுறைகள் பற்றி எல்லாம் சொன்னால் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதா என்று நீங்கள் பயந்து விடுவீர்கள்.அதையெல்லாம் தாண்டி இந்தப் படம் வருகிற போது வட மாவட்டங்களில் நன்றாக போகும் என்று தோன்றுகிறது.ஏனென்றால் அந்த அளவிற்கு இங்கே இந்த விழாவிற்குக் கூட்டம் வந்திருக்கிறது.

இந்த மாதிரி சின்ன படங்களுக்காக ராஜன் அப்பா தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் .ஒவ்வொரு சின்ன படம் வரும்போதும் அவரது குரல் ஒலிக்கிறது.
வட தமிழ்நாடு குறித்து இப்பொழுதுதான் சினிமாக்கள் வர ஆரம்பித்துள்ளன . ‘லப்பர் பந்து’ ஜெயித்த பிறகு மிகப்பெரிய சந்தோஷம் வந்துள்ளது.அதுவும் அரியலூர் மண்ணில் நடக்கிற கதைதான்.அதற்கு முன்பு இது மாதிரி வரும் படங்கள் குறைவு தான். ‘மறுமலர்ச்சி’, தங்க பச்சான் சார் எடுத்த படங்கள் போன்ற சில மட்டும்தான் வந்துள்ளன.அவை மட்டும் தான் வட தமிழ்நாடு, அரியலூர் ,சேலம், முந்திரிக்காடு பற்றிப் பேசியது.
இப்போது தான் வட தமிழ்நாடு பற்றிப் பேசும் படங்கள் வர ஆரம்பித்துள்ளன.
செஞ்சி, திருவண்ணாமலை பகுதிகளில் எல்லாம் நிறைய படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. வட தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்கள் அழகான நிறைய உள்ளன. இன்னும் யாரும் கள்ளக்குறிச்சி பக்கம் போகவில்லை. வந்தவாசி, ஆரணி பக்கமெல்லாம் யாரும் போகவில்லை.
இந்த நேரத்தில் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் வட தமிழ்நாடு பற்றி நிறைய படங்கள் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இந்தப் படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார்.
முன்னதாக விழாவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் வெளியிட்டார். விழாவில் இயக்குநர் பேரரசு, தோற்றம் படத்தின் தயாரிப்பாளர் இளங்கோவன், படத்தின் இயக்குநர் ஏ.தமிழ்ச்செல்வன், நாயகன் இளபாரி,நாயகி வசுந்தரா, நடிகர் ராஜா அம்மையப்பன், விஜு ஐயப்ப சாமி,திருநங்கை கயல் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
