• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் மலை தீபமேற்றல் வழக்கு..,

ByKalamegam Viswanathan

Dec 18, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

மனுதாரர்கள் அரசப்பாண்டியன், ராம ரவிக்குமார் ஆகியோரின் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதிட்டார். தனிநீதிபதி தர்கா, வக்பு வாரியம், மாநில அரசு, கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை, தேவஸ்தானம் உள்ளிட்ட அனைத்து தரப்புகளையும் இணைத்து விரிவாக விசாரித்த பின்னரே தீர்ப்பளித்ததாகவும், அந்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்பே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், தீர்ப்பை செயல்படுத்தக்கூடாது என்பதற்காகவே போலீஸ் குவிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது. உயர்நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மதிக்கவில்லை என்றும், இதனால் தேவையற்ற பதற்றம் உருவாக்கப்பட்டதாகவும் வாதிட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக இரு தரப்பும் சில கருத்துகளை மிகைப்படுத்தி முன்வைப்பதாகக் குறிப்பிட்டனர்.

வழிபாட்டு உரிமை முழுமையாக கோவிலுக்கே உரியது என்றும், அந்த உரிமையை அரசு ஏற்க மறுப்பது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுதாரர் தரப்பு வலியுறுத்தியது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவது இந்து மதத்தின் முக்கிய சடங்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படும் உரிமையாகவும் உள்ளதாகவும் கூறப்பட்டது.

உச்சிப்பிள்ளையார் கோவிலில் தற்போது தீபம் ஏற்றப்படும் தூண் பாரம்பரிய தூண் அல்ல என்றும், பழைய வழக்கம் மாற்றப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு தெரிவித்தது. பழமையான மலைக்கோவில்களில் கார்த்திகை தீபம் மலை உச்சியில் ஏற்றப்படுவதே மரபு என்றும், குன்றின் மேலிட்ட விளக்கைப் போல என்ற பழமொழி மற்றும் இலக்கியச் சான்றுகளே இதற்கு ஆதாரம் என்றும் வாதிடப்பட்டது. இந்த மரபை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு நீதிபதி கனகராஜ் வழங்கிய உத்தரவின் படி, தர்காவிலிருந்து 15 மீட்டர் தூரத்தில் தீபம் ஏற்றலாம் என்ற தெளிவான உத்தரவு இருப்பதாகவும், 2014 உத்தரவு 1996 உத்தரவை கட்டுப்படுத்தாது என்றும் மனுதாரர் தரப்பு வாதிட்டது. 1996 உத்தரவை ஏன் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் மதிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

திருப்பரங்குன்றத்தில் இரண்டு மலைகள் இல்லை; இரண்டு மலை உச்சிகள் மட்டுமே உள்ளன என்றும், இந்து சமய அறநிலைத்துறை சட்டப்படி கோவில் நிர்வாகமும் தேவஸ்தானமும் மலை உச்சியில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்காததால் தான் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

மலை உச்சியில் தீபமேற்ற முடியாது என கோவில் செயல் அலுவலர் தனிப்பட்ட முறையில் எவ்வாறு முடிவெடுத்தார் என்றும், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அறநிலையக் குழு இருக்கும் நிலையில் அவருக்கு அந்த அதிகாரம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

தீபத்தூணை அரசு முதலில் தவறாக சித்தரித்ததால்தான் தற்போது அதை சமணர் தூண் என புதிய வாதம் முன்வைக்கப்படுவதாகவும், இது பக்தர்களை குழப்பும் முயற்சியாகும் என்றும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது. அரசு ஒருபக்கம் நில அளவை தூண் என்றும், அறநிலையத்துறை மறுபக்கம் சமணர் தூண் என்றும் கூறி குழப்பம் ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்கு தெளிவான தீர்வு காண வேண்டியது அரசின் கடமை என்றும் வலியுறுத்தப்பட்டது.

வக்பு வாரியம் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அமைப்பே என்றும், எந்த ஆதாரமும் இன்றி புதிய சொத்துகளை சேர்த்துக்கொள்ள அதற்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர் தரப்பு தெரிவித்தது. வக்பு வாரியத்தின் பங்கு கண்காணிப்பிற்கே வரம்புபட்டது; தீபத்தூணை சொந்தம் கொண்டாட அதற்கு அதிகாரமில்லை என்றும் கூறப்பட்டது.

முருகன் மலையை சிக்கந்தர் மலை எனக் கூறி ஆடு, கோழி பலியிட உரிமை கோரப்படுவதாகவும், நெல்லித்தோப்பு வழியாக தீபமேற்ற அனுமதிக்க மாட்டோம் என தர்கா தரப்பு வாதிடுவதாகவும் மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது. கோவிலின் கீழ்பகுதியிலிருந்து படிக்கட்டுகள் மேலே செல்லும் நிலையில், யாரையும் அனுமதிக்க மாட்டோம் என கோவில் நிர்வாகம் கூற முடியுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

நடுநிலை வகிக்க வேண்டிய அரசு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும், தனிநீதிபதி உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்றும் மனுதாரர் தரப்பு வாதிட்டது. தனிநீதிபதி இயற்கை நீதிக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், அனைத்து தரப்புகளையும் கேட்ட பிறகே தீர்ப்பு வழங்கியதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே, மலை உச்சி தீபத்தூணில் வரலாற்று ரீதியாக தீபம் ஏற்றப்பட்டதற்கான சான்றுகள் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தனிநீதிபதி உத்தரவை அவசரமாக நிறைவேற்ற உத்தரவு ஏன் வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பு, தீர்ப்பு நிறைவேற்றப்படவில்லை என்பதை அறிந்து விசாரித்த பிறகே மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதாகவும் விளக்கம் அளித்தது.

விசாரணையின் போது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பதையே நீதிமன்றம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது போல் தெரிகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தன்மை, மனுதாரரின் பிரதிநிதித்துவம், மலை அளவீடு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் தீபமேற்றல் வழக்கின் விசாரணை நாளையும் நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.