திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை நடைமுறைப் படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அதே போல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையும் நாளை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக திருப்பரங்குன்றம் மலை மீது சென்று சாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ஆறாவது நாளான இன்றும் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்ட விடக்கூடாது என்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் மற்றும் முழுவதும் மலை மேல் இரவு பகலாக சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதட்டமான சூழல் தணிந்ததால் வழக்கம்போல் பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் மனுதாரர் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரவுள்ளது. அதேபோல் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




