• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உண்டியலைத் தூக்கிச் சென்று ‘நோட்டுகளை’ மட்டும் அமுக்கிய திருடர்கள்…

BySeenu

Jul 29, 2026

கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு கருவலூர் மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தாள்களை (நோட்டுகளை) மட்டும் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

​கோவை மாநகரின் மையப் பகுதியான சித்தாபுதூரில் புகழ்பெற்ற கருவலூர் மாரியம்மன் கோயில் அமைந்து உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு இருந்த உண்டியலின் பூட்டை உடைத்து, அதை அப்படியே தூக்கிக் கொண்டு கோயில் வளாகத்திற்கு அருகில் உள்ள காலி இடத்திற்குச் சென்று உள்ளனர். அங்கு வைத்து உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூபாய்த் தாள்களை மட்டும் சுருட்டிக் கொண்டு தப்பியோடி உள்ளனர்.

​விசித்திரமாக, உண்டியலில் இருந்த சில்லறை நாணயங்கள் மற்றும் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த விலைமதிப்பற்ற வெள்ளிப் பாத்திரங்கள் எதையும் திருடர்கள் கை வைக்காமல் அப்படியே விட்டுச் சென்று உள்ளனர்.

காலையில் கோயில் கதவைத் திறக்க வந்த போது உண்டியல் திருடப்பட்டு இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் நிர்வாகிகள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

​சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, கோயில் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் இதே கருவலூர் மாரியம்மன் கோயிலில் இதேபாணியில் திருட்டுச் சம்பவம் நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதே போலத் திருட்டு நடந்து உள்ளது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாகக் கைது செய்து, கோயில்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் காவல் துறைக்குக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.