• Sat. May 4th, 2024

கழகம்னா ஒரு கெத்து ஒரு மரியாதை இருக்க வேண்டும்..இவையிரண்டும் அஇஅதிமுகவில் மட்டும்தான் இருக்கிறது..,அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தமுன்னாள் எம்எல்.ஏ மகேந்திரன் பளீச் பேட்டி..!

மன நிம்மதியும் இல்லை, மனநிறைவும் இல்லை. ஆகையால்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை விட்டுவிட்டு, தாய்க்கழகத்திற்கே வந்துவிட்டேன் என்று புத்துணர்வாக மதுரை தெற்கு மாவட்டச் செயலாளரும், அமமுக மாநில தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேந்திரன் திடீரென எடப்பாடியை சந்தித்து அஇஅதிமுகவில் இணைந்த விஷயத்தைப்பற்றி நம்மிடம் மனம் விட்டுப் பேசினார்.
மேலும் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்..,

அமமுகவில் இருந்து திடீர் விலகல் ஏன்?
மன நிம்மதியும் இல்லை, மனநிறைவும் இல்லை. ஆகையால்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை விட்டுவிட்டு, தாய்க்கழகத்திற்கே வந்துவிட்டேன். இதைவிட தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் அண்ணன் எடப்பாடியாரின் செயல்பாடுகள் என்னை ஈர்த்து விட்டது. இதைவிட மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர் தற்போது இல்லை என்று உணர்ந்துதான் எங்களது மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணன் எடப்பாடியரை நேரடியாகச் சந்தித்து, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அவர்களின் ஆசியோடு கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

நீங்கள் அமமுகவில் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றும் போது அங்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதா?
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. கழகம்னா ஒரு கெத்து, ஒரு மரியாதை இருக்க வேண்டும். அந்த கெத்து அதிமுகவில் மட்டும்தான் இருக்கிறது. இதை உணர்ந்துதான் தாய்க்கழகமே எனக்குச் சொந்தம் என்று முடிவெடுத்து ஓடி விரைந்தேன் அதிமுகவிற்குள்.

அமமுகவில் இருந்து அதிமுகவிற்குள் வந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?
நீங்கள் சரியான கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். அஇஅதிமுக என்ற மிகப்பெரிய கழகம் அடிமட்டத்தொண்டனைக் கூட மரியாதையாக நடத்தும். அந்த மரியாதை எனக்கு கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு வந்திருக்கிறேன். அண்ணன் எடப்பாடியார் நான் தாய்க்கழகமாக நினைத்துக் கொண்டிருக்கிற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகச்சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் ரத்தத்தின் ரத்தங்கள் அனைவரும் வியர்வை சிந்தி அல்ல, ரத்தத்தைச் சிந்தி கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். உரியமரியாதை கிடைத்துக் கொண்டிருப்பதால்தானே அண்ணன் எடப்பாடியாரை புடைசூழ்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். நான் தொண்டனாக இருக்க விரும்புகிறேன். அதனால்தான் அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் தொண்டனாக என்னை இணைத்துக் கொண்டேன். இதுதான் எனக்கு மிகப்பெரிய கௌரவம்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி மிக அழகாக புகழாரம் சூட்டுகிறீர்கள். திடீரென அவரை எப்படிப் பிடித்தது?

எங்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களே பெருமை கொள்ளும் அளவிற்கு அஇஅதிமுகவை வழிநடத்திச் செல்கிறார். அவர் எடுக்கிற ஒவ்வொரு முடிவும் மிகத்துல்லியமாகவும், தெளிவாகவும் இருக்கிறது. அதற்கு உதாரணம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சியை வேரறுத்துத் தூக்கி எறிந்ததைத்தான் உதாரணமாகச் சொல்லமுடியும். புரட்சித்தலைவி அம்மாவைப் போல் தீர்க்கமான முடிவை எடுக்கக் கூடிய ஒரே தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிதான். 

மதுரையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

அண்ணன் செல்லூர்ராஜூ, எம்எல்ஏ ராஜன்செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் இவர்கள் மூவருமே எனது வழிகாட்டிகள்தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டுமோ அப்படியெல்லாம் உயிரைக் கொடுத்து வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள். 

அதிமுகவில் உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
நான் மேலே குறிப்பிட்டுச் சொன்ன வார்த்தைகளைத்தான் மீண்டும் பதிவு செய்கிறேன். எங்கள் மாவட்டச் செயலாளர் அண்ணன் ஆர்.பி.உதயகுமார் வழிகாட்டுதலின்படி, எங்கள் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் உத்தரவின்படி, எனது மேலான தாய்க்கழகத்தை உண்மையாக வளர்ப்பேன். இதில் நான் உறுதியாக இருப்பேன். இரட்டைஇலை மீண்டும் தமிழகத்தில் துளிர் விடும். அதற்கு நான் உறுதுணையாகப் பணியாற்றுவேன் என்றார் மகேந்திரன் உத்வேகமாக.

படங்கள் : P.தங்கபாண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *