மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, அந்த கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,

மக்கள் விரோத திமுக அரசில் தொடர்ந்து காவல்துறை விசாரணைக்கு செல்கிறவர்களின் உயிர் உத்திரவாதம் இல்லை என்ற நிலை இருக்கிறது.
இப்போது Justiceforajithkumar என்ற கேஸ்டாக் தேசிய அளவில் அஜித்குமாருக்கு நீதி வேண்டும் என்கிற வகையில் இந்த கேஸ்டாக் டிரெண்டிங் ஆகி உள்ளது என்று சொன்னால் இந்திய அளவில் தமிழகம் தலைகுணிந்து இருக்கிறது.
காவல்துறையை கையில் வைத்துள்ள மு.க.ஸ்டாலின் ஆட்சியில், காவலருக்கும் பாதுகாப்பு இல்லை, காவல் நிலைய விசாரணைக்கு செல்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமார் படுகொலை செய்யப்படுகிறார், அவரது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என தீர்மானம் கொண்டு வந்தால் சட்டமன்றத்தில் அனுமதிக்கவில்லை.
இதே போன்று திருமங்கலம் தொகுதியில் சத்திரப்பட்டியில் இரவு காவல் பணி இருந்த காவலரை கொலைவெறி தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களை நொறுக்கி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள்.
இப்போது ஒரு புகார் வருகிறது என்று சொன்னால் சட்டத்தில் எல்லா வழிமுறைகளும் இருக்கிறது. இவ்வளவு பெரிய தாக்குதல் ஏன்?

இந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை லாக்அப் மரணங்கள், இராமநாதபுரத்தில், திருநெல்வேலியில், சென்னையில் என எல்லா பகுதியிலும் நடக்கிறது. இதையெல்லாம் இந்த அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.
ஆகவே தமிழகத்தில் இருப்பது காவல் நிலையமா கொலை நிலையமா என்பது தான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.
காவல் நிலையம் நமக்கு பாதுகாப்பு என்பதை விட காவல் நிலையம் உயிர் பறிக்கும் கசாப்பு கடைக்கார்களின் நிலையமாக மாறி இருக்கிறது.
அதற்கு காரணம் அதை நிர்வகிக்கும் மு.க.ஸ்டாலின், இந்த அரசு வீட்டிற்கு செல்ல வேண்டும், அதிமுக ஆட்சி மலரும் போது இங்கிலாந்து ஸ்காட்லாந்து நாடுகளுக்கு இணையான காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை செயல்படும்.
Justice for ajithkumar என்றால் என்னவென்றால் அவர்களுக்கு இன்னும் நீதி வழங்கவில்லை, அவருக்கு தந்தை இல்லை, தாயும், தம்பியும் அழைத்து சென்று மதுரையில் பிரேத பரிசோதனை செய்தனர். இன்னும் நீதி கிடைக்கவில்லை நீதி கிடைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கொலை பாதக சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். எங்களது கண்டனத்தையும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
விசாரணை இல்லை – கொலை தான் நடக்கிறது, கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என என பேட்டியளித்தார்.